“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார். சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில்  கள ஆய்வு மேற்கொண்ட அவர் மருத்துவமனையில் வழங்கப்படும் உணவுகள் குறித்தும் மருத்துவமனை வசதிகள் குறித்தும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார் 

அப்போது அவர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து பெருமையாக பேசினார்.தொடர்ந்து சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நாள் தோறும் நோயாளிகள் அவதி அடைந்து வருவது குறித்தும் காது, மூக்கு, தொண்டை மருத்துவம் கிடைக்காது என பிளக்ஸ் போர்டு வைத்துள்ளது குறித்தும் கேட்ட கேள்விக்கு அரசிடம் தெரிவித்து போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் மருத்துவ பணிகள் செய்தது குறித்த நமது ஜெயா பிளஸ் செய்தி சேனலில்  செய்தி வெளியான நிலையில் மருத்துவமனையில் தூய்மை பணியாளர் மருத்துவ பணி மேற்கொண்டது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார்.

உங்கள் ஊரில் உங்களைத் தேடி திட்டம் குறித்து அரசின் சாதனைகளை பட்டியலிட்ட ஆட்சியர் மருத்துவமனையின் குறைகள் குறித்து கேட்டதும் பதில் அளிக்காமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.