தென்காசி மாவட்டம், சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையானது இயற்கை எழில் கொஞ்சும் வனமாகும். இந்த வனத்தில் அரிய வகை உயிரினங்களான உடும்பு, எறும்புதிண்ணி, யானை, மான், கரடி, சிறுத்தை, பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்களும் அரிய வகை மூலிகைச் செடிகளும், விலை உயர்ந்த மரங்களும் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வனத்தில் வாழக்கூடிய உயிரினங்களை பாதுகாக்க அரசு வனத்துறையை உருவாக்கி வனத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தும் சிவகிரி வனத்துறையினர் வனஉயிரினங்களை பாதுகாக்காமல் வேடிக்கை பார்த்தும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் வன குற்றங்களுக்கு சிவகிரி வனத்துறையினரே உடந்தையாக இருப்பதாகவும் வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பிடிபட்ட மான்கொம்புகள்

இந்நிலையில் சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் நாள்தோறும் வனக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை வனத்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகிரி காவல்துறையினர் வாகன சோதனையின் போது சிவகிரி வனத்துறை அலுவலகம் அருகே சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த காரை காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் மான்கொம்புகள் இருந்துள்ளது.

இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் விசாரணை செய்து சிவகிரி வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிவகிரி காவல்நிலையம்

சிவகிரி வனத்துறையினர் இரண்டு நாட்களாக கட்டப்பஞ்சாயத்து செய்து விசாரணை மேற்கொண்டதில் புள்ளிமானை வேட்டையாடியதாக விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து கிருஷ்ணகுமர் (24) தியாகு (24) ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள்

சிவகிரி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாமல் மெத்தனமாக செயல்பட்டு உயர் அதிகாரிகளுக்கு நேர்மையாக இருப்பதாகவும், வன உயிரினங்களை பாதுகாக்கவும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக நடித்து வருகின்றனர் என்கின்றனர். ஆனால் தற்போது வனக்குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்து கொடுத்த சம்பவம் வனத்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

எனவே மெத்தனமாக செயல்பட்டு வரும் சிவகிரி வனத்துறையினர் மீது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.