விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

மறைந்த எம்எல்ஏ புகழேந்தி

அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்றும், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூன் 14ம் தேதியும், வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21ம் தேதி எனவும் அறிவித்தது.

மேலும், மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஜூலை 10ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது.

இதையடுத்து, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, ஆளுங்கட்சியான திமுக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது. வெளியூரிலிருந்து வேட்பாளர்கள் வேண்டாம் என்ற சென்ட்டிமென்டால் லோக்கல் வாசியான அன்னியூர் சிவாவை செலக்ட் செய்துள்ளனர்.

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

வேட்பாளர் அன்னியூர் சிவா 35 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருந்து வருகிறார். பழகுவதற்கு நல்ல மனிதர், எளிய அணுகுமுறை உள்ளவர். தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவார். எதிர் முகாமில் யார் போட்டியிட்டாலும் அன்னியூர் சிவாவுக்கு வெற்றி உறுதி என்கிறார்கள் திமுகவினர்.

வெற்றிக்களிப்பில் உள்ள திமுக இடைத்தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என முஷ்டியை முறுக்கி வருகிறது. அதிமுகவினர் மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட பெரிதாக ஆர்வம் காட்டாமல் ஆளை விட்டால் போதும் என்று இருந்தனர்.  ஆனால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில், திமுக கூட்டணி வேட்பாளர் பெற்ற ஓட்டுகளை விட, அதிமுக வேட்பாளர் 6,823 ஓட்டுகள் மட்டுமே குறைவாக பெற்றிருந்தார்.

எனவே இந்த தொகுதியில் சற்று உழைத்தால் போதும் வெற்றி கிட்டும் என அதிமுகவில் பலரும் வேட்பாளராக, போட்டிபோட்டு வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்செல்வன் அல்லது முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகத்தின் சகோதரருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்கின்றனர்.சிவி தடாலடி பார்ட்டி என்பதால் தேர்தல் பணிகள் சறுசுறுப்பாக இருக்கும். கட்சியில் எடப்பாடி பழனிச்சாமியின் ரேட்டிங் அதள பாதாளத்திற்கு போயுள்ளதால் இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தொண்டர்களுக்கு புதுத்தெம்பு அளித்து தனது இமேஜை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்ச்செல்வன்

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகித்து ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. அதனால் கூட்டணிப் பயணத்தில் சுகமில்லை சுமைதான். அதோடு, இந்த தொகுதியில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருப்பதால் பாமக களம் காண காய் நகர்த்தி வருகிறது. 2026 சட்டசபை தேர்தல் வரை, கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டிய நிலை பாஜகவுக்கு உள்ளதால் தொகுதியை பாமகவுக்கே கொடுக்கும் என்கின்றனர்.

ஒருவேளை பாமக தனித்து களம் கண்டால், தொடர் தோல்வியாலும் மக்களவை தேர்தலில் 81 சட்டசபை தொகுதிகளில் பாஜகவின் இமேஜ் டேமேஜ் ஆகியுள்ளதால் தனித்து நின்றால் டெபாசிட் கிடைப்பதே சிரமம் தான்.இருப்பினும் பாஜக தமிழகத்தில் படிப்படியாக வளர்ந்து வருகின்றது. அதனின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள அக்கட்சி விடாப்பிடியாக போராடும் அல்லது பாமகவிற்கு விட்டுக்கொடுக்கும் என்கிறார்கள்.

ராமதாஸ், அன்புமணி

மக்களவை தேர்தலில், 8.14 சதவீத ஓட்டுகளை பெற்று, மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி, வழக்கம்போல் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி என கமெண்ட் அடித்துவிட்டு சீமான் சென்று விடுவார். அவருக்கு வெற்றி தேவையில்லை, வாக்குவங்கி கூடுவதுதான் தேவை என்றனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்து தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளதால் வாக்காளர்கள் மீது பண மழை பொழியும்!

  • கடந்த, 2019ல், அதிமுக ஆட்சியின்போதும், விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், ஒரு லட்சத்து, 13,766 ஓட்டுகள் பெற்று, 44,924 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக 68,842 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தது. அடுத்து 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், திமுக வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.