சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர், வங்கி ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி. நகரில் உள்ள பர்க்கிட் சாலையில் எச்.டி.எப்.சி., வங்கி செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல வங்கிப் பணிகள் நடந்து வந்த நிலையில், வாடிக்கையாளர் போல மர்ம நபர் உள்ளே நுழைந்தார். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தினேஷ் என்பவரை அந்த நபர் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில், தினேஷின் காதில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டியது. உடனே, அங்கிருந்தவர்கள் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து, தி.நகர் போலீஸில் ஒப்படைத்தனர். காயமடைந்து வலியால் துடித்து கொண்டிருந்த ஊழியர் தினேஷை, சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரின் இந்த கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து, ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.