விருதுநகர் அருகே நடந்த கொலையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்த முயன்ற பெண் டிஎஸ்பி-ஐ போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதோடு அவரது தலை முடியை பிடித்து இழுத்து ரகளை செய்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த 35 வயதான காளி குமார் சரக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று தனது வாகனத்தில் திருச்சுழியை நோக்கி சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விளக்கு அருகே சென்றபோது இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட அந்த கும்பல் காளிகுமாரை திடீரென கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காளிகுமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அவ்வழியாக சென்ற சிலர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே காளிகுமார் உயிர் இழந்தார். இதனையடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து காளி குமாரின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிய தொடங்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் காளிகுமாரை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் திருச்சுழி-அருப்புக்கோட்டை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி ஆன காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திடீரென அங்கிருந்த இளைஞர் ஒருவர் டிஎஸ்பி காயத்ரியை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த நபரை அப்புறப்படுத்த முயன்ற போது திடீரென அவர் பெண் டிஎஸ்பியி-யை தாக்கினார். தொடர்ந்து டிஎஸ்பி உடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரை சூழ்ந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென போலீசாரையும் பெண் டிஎஸ்பியையும் சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்கினர். சிலர் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் சூழ்ந்து கொண்ட காவலர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து அவர்களை தாக்க தொடங்கினர். போலீசாரை விட அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் காவல்துறையினருக்கும் அடி விழுந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து ஒரு வழியாக பெண் டிஎஸ்பிஐ மீட்டு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பெண் டிஎஸ்பி-யை தாக்கிய நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் தொடர்பாக விருதுநகர் எஸ்பி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.