தென்காசி எம்பியாக இருக்க கூடிய ராணி ஸ்ரீ குமாருக்கு அமைச்சரையும் மீறி கனிமொழியிடம் சென்று சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். எனவே ஒன்றிய செயலாளருடன் செல்ல கூடாது என சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் ஆதரவாளர் ஒருவர் திமுக கிளை செயலாளரிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.


சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக உட்கட்சி பூசலை ஏற்படுத்தி குளிர்ந்துகாய்ந்து வருகிறார் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா.
இவருடைய ஆதரவாளர் திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த நிர்வாகி பிரபாகரன் கிளைச்செயலாளர் கணேசனை போனில் தொடர்பு கொண்டு; நம்ம ஆளு ஒருவர் மாவட்ட செயலாளராக இருக்காரு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எம்எல்ஏவாகவும், மாவட்ட செயலாளராகவும் இருப்பாரு. திமுக ஒன்றிய செயலாளர் கடற்கரை என்பவரிடம் சென்றால் எம்எல்ஏ-விடம் ஒரு உதவியும் கேட்க முடியாது.

பிரபாகரன் மற்றும் எம்எல்ஏ ராஜா


இன்றைக்கு எம்பியாக இருக்க கூடிய ராணி ஸ்ரீ குமாருக்கு சீட்டு வாங்கி கொடுத்தது தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தான். அமைச்சரையும் மீறி ஜெயபால் கனிமொழியிடம் சென்று சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். இனி எம்எல்ஏ-விடம் எந்த உதவியும் கேட்க முடியாது.
நம்ம ஆளுங்கட்சியா இருக்கோம், நம்ம ஆளு ஒரு மாவட்ட செயலாளராக இருக்காரு உண்மையில் இவருக்குத்தான் ஆதரவு கொடுக்க வேண்டும், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனால் ஒன்றும் செய்ய முடியாது.



தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறிவந்தனர். ஆனால் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால் அமைச்சர் பதவி வழங்குவது சிரமம் என்கிறார்கள்.


இப்பத்தான் எம்எல்ஏ ஆபிசில் தகவல் வந்தது. அதனால்தான் உடனடியாக உங்கிட்ட சொல்றேன். சட்டமன்ற உறுப்பினர் ராஜா பதவியில் இருந்தால் மட்டுமே நம்ம சாதிக்கு பெருமை. ஒன்றிய செயலாளர் கடற்கரை பின்னால் அலைந்தால் எப்படி என அவதூராக திமுக வழக்கறிஞர் அணி பிரிவு நிர்வாகி பிரபாகரன் கிளை செயலாளர் கணேசன் என்பவரிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், எல்லா மாவட்டங்களிலும் கோஷ்டி பூசல் இருக்கிறது என்றாலும், இந்த மாவட்டத்தில் கோஷ்டியோடு சாதிப் பாகுபாடும் இருப்பதால்தான் உஷ்ணம் அதிகமாகியுள்ளது. திமுக தலைமை இது குறித்து சிறப்புக்குழு அமைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உட்கட்சி கோஷ்டி பூசல் என்பது நமது கழகத்திற்கு நாமே வெட்டிக்கொள்ளும் சவக்குழி என்பார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். கழக தலைவரின் சொல்லைத் தட்டிக்கழிக்கும் திமுக நிர்வாகிகளைத் கொஞ்சம் தட்டி வைப்பாரா ஸ்டாலின்?