செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிறு பெட்டிக்கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஜேசிபி வாகனத்தை கொண்டு நொறுக்கியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது. கடையை இழந்த அந்த பெண்மணியின் அழுகுரல் மனதை ரணமாக்குகிறது.

சாலையோரங்களில் சிறு வியாபாரிகள் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்காக தள்ளுவண்டி கடைகள் வைத்து பிழைத்து வருகின்றனர். சட்டப்படி முன்னறிவிப்பு கொடுத்து அவர்கள் அகற்றாவிட்டால், அவர்களின் தள்ளுவண்டிகளை பறிமுதல் செய்யலாம், பெட்டிக்கடைகளை சீல் வைக்கலாம். சட்டத்தை மீறியதற்காக தண்டம் விதிக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்தனமாக ஜேசிபி வாகனத்தை வைத்து அடித்து நொறுக்கி அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர்.

வாகனப்போக்குவரத்து அதிகமுள்ள சில நெடுஞ்சாலைப் பகுதிகளில் எத்தனையோ ஆக்கிரமிப்புகள் உள்ளது. பலர் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். விதிமீறிய வணிக கட்டிடங்கள் உள்ளது. மேற்படி நபர்களெல்லாம் மாமூல் கொடுத்தும், செல்வாக்கை பயன்படுத்தியும் “தாஜா” செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சாலையோர கடைக்காரர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அந்தப் பெண்மணியின் பெட்டிக்கடைக்குள் இருந்த பொருட்களுக்கான தொகையையும், சேதப்படுத்தப்பட்ட பெட்டி/தள்ளுவண்டி கடைக்கான தொகையையும் நெடுஞ்சாலைத் துறையினரிடமிருந்து ‌பெற்றுத்தர வேண்டும். அதோடு அவர்களின் மேல் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எளியவர்களின் குரல்வளையையே அதிகார வர்க்கம் நசுக்குகிறது. வலியவர்களின் முன்பு கைகட்டி கூனிக்குறுகி நிற்கிறது. சாராயம் குடித்து இறந்தவருக்கெல்லாம் பெருங் கருணைகாட்டும் திராவிட மாடல் அரசு, உயிரோடு இருக்கும் இதுபோன்றவர்களின் வாழ்வாதாரத்திற்கும் சற்று உதவ முன் வரவேண்டும்.