தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் ச.பரத்குமார், ஜீ. ஜெயமுருகன், ப.லோகேஷ் குமார், மு.மதன் ஆகியோர் இரண்டு மாத கிராம தங்கல் மூலம் உடுமலை சுற்று வட்டார விவசாயிகளைச் சந்தித்து அவர்களிடம் இருந்து விவசாயம் மற்றும் பட்டுப்புழு விவசாயம் சார்ந்த தகவல்களை திரட்டி வந்தனர். இன்று (மே-23) அம்மாணவர்கள் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம் (ATMA) உதவியுடன் மானுபட்டி கிராமத்தில் விவசாயிகளை ஒரு குழுவாக ஒருங்கிணைத்து சந்திப்பு கூட்டம் நடத்தினர்.
இதில் அவர்களுக்கு பட்டுப்புழு வளர்ப்பு நாட்காட்டி செயலி மற்றும் பட்டுப்புழு செயலின் பயன்களை எடுத்துக்கூறியும் அதை எவ்வாறு பயன்படுத்துவது பற்றி விளக்கம் அளித்தனர். இதன் மூலம் இந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் இந்த செயலியை அவர்கள் புலனக்குழுக்களில் பகிர்ந்து கொண்டனர். இந்த செயலி விவசாயிகளுக்கு தினந்தோறும் என்ன செயல்கள் செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டுவதோடு இந்த செயலி புதிதாக பட்டுப்புழு வளர்க்கும் விவாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எடுத்துரைத்தனர். அதுமட்டுமல்லாது இம்மாணவர்கள் பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகள் சந்திக்கும் சவால்களில் மிகப் பெரிய சவாலாக இருப்பது ஊசி ஈ தாக்கம் தான். இந்த பிரச்சனையை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் புழு வளர்ப்பு மனையில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் பற்றியும் விளக்கம் அளித்தனர்.
மேற்படி மாணவர்களின் விவசாயம் சார்ந்த விளக்கக் கூட்டம் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாகவும் விழிப்புணர்வாகவும் அமைந்தது.