ஜிஎஸ்டி பற்றி பேசியது தொடர்பாக அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் தனிப்பட்ட சந்திப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்டது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் அன்னபூர்ணா சீனிவாசனை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் அதில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி பேசினார். அவரது இந்த பேச்சு என்பது இணையதளங்களில் வேகமாக பரவியது. சீனிவாசன் பேசும்போது, ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ (மறைமுகமாக வானதி சீனிவாசன்) எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க.பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என கூறினார். இதற்கிடையே சீனிவாசன் பேசிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வீடியோவை பகிர்ந்து நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர். அதேபோல் சீனிவாசனை புகழ்ந்து பதிவிட்டு வந்தனர். இதையடுத்து நேற்று முதல் ஒரு வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளர் சீனிவாசன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியது தான் அந்த வீடியோ. நிர்மலா சீதாராமன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் இருக்கிறார். அப்போது அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ‛‛நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்” என எழுந்து கைக்கூப்பி மன்னிப்பு கோரியிருந்தார். இந்த வீடியோ வெளியானது. இதனையும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் விமர்சனம் செய்தனர். ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டியவரை அழைத்து பாஜக மன்னிப்பு கோர வைத்து அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டதாக விளாசினர்.
காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முதல் திமுக உள்பட பல கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவின் இந்த நடவடிக்கையை கண்டித்து மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரியுள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக சார்பில் அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் தொடர்பான வீடியோவை பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் கட்சியினர் சார்பில் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளரான சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத செயலுக்கு வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன் அண்ணா தமிழ்நாட்டின் தொழில்துறையில் தூணாக இருக்கிறார். மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பு அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை மரியாதையுடன் இத்துடன் முடித்து வைக்க வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டு கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்