திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், சோழமாதேவி ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நல்ல கல்விதரத்துடன் செயல்பட்டு வருவதால் இங்கு சுமார் 235 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மடத்துக்குளம் வட்டத்திலேயே இந்த துவக்கப்பள்ளியில் தான் அதிக மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் சுமார் 800 சதுரடி பரப்பளவுள்ள பழைய அங்கன்வாடி கட்டிடத்தில், திட்ட இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற நிர்வாகம் என யாரிடமும் அனுமதி பெறாமல் முறைகேடாக M.S.420 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சுமார் ஒன்றரை வருடங்களாக இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தில் பால் வாடையின் காரணமாக ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஈக்களின் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற இடர்பாடுகளால் கல்வி கற்கும் சிறார்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. மாணவர்களின் பெற்றோர்களும் புகார் கூறினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான் என்கிறார்கள்.
இதுகுறித்து சோழமாதேவியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்.. தனிநபர் தன் சுயலாபத்திற்காக செய்யும் தொழிலுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின் கட்டணம் செலுத்தி வருவது கொடுமையிலும் கொடுமை. இந்த பால்கொள்முதல் நிலையத்தை காலிசெய்ய வேண்டும் என்று கிராமசபையில் தீர்மானம் நிவைவேற்றியும், ஆட்சியரிடம் புகார் அளித்தும் எவ்வித பலனும் இல்லை என்கின்றனர். ஊராட்சியில் நூலகம் இல்லை. பால்கொள்முதல் நிலையம் காலிசெய்யப்படும் பட்சத்தில் இந்த கட்டிடத்தில் நூலகம் அமைப்பதற்காக கட்டிட மராமத்து பணிக்காக ஒன்றரை இலட்சம் ரூபாயை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரசிடம் கோரியுள்ளனர். இங்கு நூலகம் அமைந்தால் ஊராட்சி பகுதியில் வசிப்போர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் என்றார்.
அரசுப் பள்ளிகளில் போதுமான உள்கட்டுமான வசதிகள் இல்லாதது, சுகாதாரம் குறைவு போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் இருந்து தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.குறைவான மாணவர்கள் வருகை, அடிப்படை வசதிகள், சுகதாரம் குறைவு, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இதுவரை சுமார் 800 அரசுப்பள்ளிகள் மூடுவிழா கண்டுள்ளது என செய்திகள் கூறுகிறது.எனவே மாணவர்கள் வருகையும், கல்வித்தரமும் சிறப்பாக உள்ள இந்த துவக்கப்பள்ளிக்கு பள்ளி வளாகத்திற்குள் அனுமதியின்றி நடக்கும் பால் வியாபாரமே விரைவில் பள்ளிக்கு பால் ஊற்றிவிடும் என்கிறார்கள்.
எனவே, இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் மலர்விழி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு எவ்வித அனுமதியும் பெறாமல் முறைகேடாக பள்ளி வளாகத்திற்குள் இயங்கும் பால் கூட்டுறவு விற்பனையை தடுத்தும், அதோடு பால் விற்பனை செய்து வருபவர்கள் மீதும், இதனை கண்டு கொள்ளாமல் இருக்கும் மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என பெயர்பெற்ற திட்ட இயக்குனர் மலர்விழி நடவடிக்கை மேற்கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்?