கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவில் இணைந்துள்ளார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இன்று தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அப்போது, செங்கோட்டையனுக்கு தவெகவின் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் உடனிருந்தனர்.

தவெக உறுப்பினர் அட்டையை சட்டைப் பையில் வைத்துக் கொண்ட செங்கோட்டையன்
கட்சியில் இணையும் நிகழ்வில் “வேற்றுமைகளை களைந்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்” என்று செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் விஜய் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
செங்கோட்டையன் உறுதிமொழி ஏற்ற பிறகு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் விஜய். அதன் பின் அவருக்கு பச்சை நிற சால்வை அணிவித்தார் விஜய். பிறகு, விஜய் தவெகவின் கட்சித் துண்டை செங்கோட்டையனின் கழுத்தில் அணிவித்தார்.
பிறகு விஜய் தவெகவின் உறுப்பினர் அட்டையை செங்கோட்டையனிடம் வழங்க, அதைப் பெற்றுக் கொண்டு தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.
அதன் பின், செங்கோட்டையன் விஜய்க்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தார். மேடையில் விஜயிடம் சில நூல்களையும் விஜய்க்கு பரிசாக அளித்தார். அப்போது புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க இருவரும் அருகருகே நின்றபோது, செங்கோட்டையனின் கழுத்தில் இருந்த தவெக கட்சித் துண்டை சரி செய்தார் விஜய்.
கட்சியில் இணைந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மேடை ஏறி விஜயிடம் வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சால்வை மற்றும் தவெக கட்சித் துண்டை அணிவித்து, கட்சியில் வரவேற்றார் விஜய்.
“ஏன் தவெகவில் இணைந்தேன்?” – செங்கோட்டையன் விளக்கம்
தவெகவில் இணைந்த பிறகு தவெக நிர்வாகிகளுடன் இணைந்து கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவில் எம்ஜிஆரால் நான் அடையாளம் காட்டப்பட்டவன். தலைவருக்கு பின்னால் அணிதிரண்டவர்களில் நானும் ஒருவன். அவர் கட்சி தொடங்கிய போது, இந்த கட்சி 100 நாட்கள் கூட ஓடாது என்று விமர்சித்தனர். ஆனால், மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ளார். ஆனால் இன்றைய நிலைமைகள் வேறு. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆட்சி நடத்தினோம். மூன்று கூறுகளாக பிரிந்தோம். எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அது நடைபெறவில்லை. நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று பார்த்துக்கொள்வான்.” என்று கூறினார்.
இன்று திமுக வேறு, அதிமுக வேறு அல்ல என்று குறிப்பிட்ட செங்கோட்டையன், இரண்டும் ஒன்றாக இணைந்து தான் பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்றார்.
மேலும், “இளவல் விஜய் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். 2026-ல் மாபெரும் புரட்சி உருவாகி வெற்றி என்ற இலக்கை இளவல் விஜய் எட்டுவார் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, திமுக அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்தார் என்ற தகவலை மறுத்த அவர், “என்னை திமுக அல்லது தேசிய கட்சிகள் யாரும் சந்திக்கவில்லை” என்றார்.
அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துவிட்டு, தவெகவில் இணைந்தது ஏன் என்று கேட்டதற்கு, “அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நான் கெடு விதிக்கவில்லை. நீங்களாகவே செய்தி போட்டுவிட்டீர்கள். என்னை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் அவரும் காய் நகர்த்திவிட்டார்” என்றார்.
தவெக அலுவலகத்துக்கு வரும் போது ஜெயலலிதா புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்திருந்தது குறித்து கேட்டபோது, “யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். புகைப்படத்தை எடுத்திருந்தால், இன்றே புகைப்படத்தை எடுத்துவிட்டார் என்று நீங்களே சொல்வீர்கள், ஒரே நாளில் இப்படி மாறிவிட்டார் என்று பேசுவீர்கள். பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் ஆகியோரின் புகைப்படங்கள் அவரது (விஜய்) வாகனங்களிலும் உள்ளன” என்று செங்கோட்டையன் பதிலளித்தார்.

விஜய் பேசியது என்ன?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், செங்கோட்டையன் தனது கட்சியில் இணைந்த பிறகு அது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில் விஜய், “20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்ஜிஆர்-ஐ நம்பி அவரது மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சிறுவயதில் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பின் அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு (எம்ஜிஆர், ஜெயலலிதா) பெரிய நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன், இன்று அவரது அரசியல் அனுபவமும், அவருடைய அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அவருடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்” என்று பேசினார்.
பாஜக கூறுவது என்ன?
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “பாஜக யாருக்கும் எந்த வாக்குறுதியும் தரவில்லை. அதிமுகவில் இருந்துகொண்டு பாஜகவை நம்பி இருந்தோம் என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும், எப்படி பொருத்தமாக இருக்கும்? செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர்களின் உட்கட்சி பிரச்னை குறித்து பேசுவது நியாயமாக இருக்காது.” என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து மதுரையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “அவர் (செங்கோட்டையன்) அதிமுகவில் இல்லை. எனவே அதைப் பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “செங்கோட்டையனுக்கு எனது வாழ்த்துகள். செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கும் அந்த கட்சிக்கும் பலம் சேர்க்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பாராட்டி பேசுகிறார் விஜய். செங்கோட்டையனுக்கு உரிய மரியாதையை தவெக கொடுக்க வேண்டும்.
அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றாக சேரப்போவதில்லை.” என தெரிவித்தார்.
மேலும், “செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது குறித்து, எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, “என்னை ஏன் கேட்கிறீர்கள்” என்கிறார். இவர் தானே செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார், இவர் தானே அந்த தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தினார், பிறகு வேறு யாரை கேட்பது? இப்படி இருந்தால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.” என்றார்.
பின்னணி
அதிமுகவை எம்.ஜி.ஆர் நிறுவிய காலம் தொட்டு அக்கட்சியில் பணியாற்றிவரும் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், அவரது கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் கட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 3 ஆம் தேதி ஊடகங்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் மனம் திறந்து பேசப் போகிறேன். எனது கருத்துக்கள் கட்சி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும்” என்று கூறியிருந்தார்.
மனம் திறந்து பேசப்போவதாக கூறிய அவர், “அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்” என்று செப்டம்பர் 5ம் தேதி பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். அது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு மேற்கொள்வதற்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார்.
அடுத்த நாளே அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன் ஊடகங்களில் பேசிய செங்கோட்டையன், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன்னை அழைத்து பேசியது பாஜகதான் என்றதுடன் “பாஜகவை விட்டால் நமக்கு வேறு வழியில்லை, நம்மை விட்டால் பாஜகவுக்கும் வேறு வழியில்லை என்று கூறினேன். என்னை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக ஒருபோதும் முயற்சிக்கவில்லை” என்று தெரிவித்தார். 2026-ல் அதிமுக மாநிலத்தில் ஆட்சி அமைக்க உதவ வேண்டும் என்றும் 2029-ல் பாஜகவின் எண்ணங்கள் நிறைவேற கட்சித் தலைமையிடம் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தான் கூறியதாக அப்போது செங்கோட்டையன் பேசியிருந்தார்





