சங்கரன்கோவிலில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதனை தடுக்க வேண்டிய வனத்துறையினரே மெத்தனமாகவும், அலட்சிய போக்குடனும் செயல்பட்டு வருவதாக குற்றசாட்டுக்களை எழுப்புகின்றனர் வன ஆர்வலர்கள்.

குறிப்பாக சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் கண்மாய் பகுதிகளில் கடந்த வாரம் வனவிலங்குகளை வேட்டையாட பழங்களில் வெடி வைத்து சிதறி கிடந்ததை கண்ட மான் ஒன்று பழம் என நினைத்து தின்ற அடுத்த நொடி மான் வாய் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.கடந்த ஓராண்டில் மட்டும் கரிவலம் பெரிய கண்மாய் பகுதிகளில் பழங்களில் வெடி வைத்து ஆடு, மாடு, மான், பன்றி உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் உட்பட வனவிலங்குகளும் தொடர்ச்சியாக இறந்து வருகிறது.

உயிரிழந்த கடமான்

கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை தற்போது வரை கைது செய்யாமல் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டு வருகின்றனர்.இதே போல் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மான், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினார்கள், ஆனால் வனவிலங்கு வேட்டைக்கு பயன்படுத்திய காரை தற்போது வரை வனத்துறையினர் பறிமுதல் செய்யாமல் தேடி வருகின்றனர்.

ஜான்சன்

இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியில் பாபு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஜான்சன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.அவருடைய தோட்டத்தில் வாழை, ரோஜா பூ, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் அழித்து நாசம் செய்து வருவதால் ஜான்சன் மக்காச்சோளத்தில் விஷம் கலந்து விவசாய நிலத்தை சுற்றி சிதறியுள்ளார்.இதனை பார்த்த மயில்கள் கூட்டம் ஆங்காங்க சிதறி கிடந்தது விஷம் கலந்த மக்காசோளம்  உணவு என நினைத்து தின்றதில் துடி துடிக்க மயில்கள் ஆங்காங்க விவசாய நிலங்களில் உயிரிழந்து கிடந்துள்ளது.

உயிழந்த மயில்கள்

இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் குருவிகுளம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மயில்கள் அதிகளவில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மயில்களை மீட்டு ஐம்பது மயில்களையும் ஒரே இடத்தில் வைத்து நெல்லை வன கால்நடை மருத்துவ குழுக்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர்…

பிரேத பரிசோதனைக்கு வந்த மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் சிறிது நேரம் பெயரளவிற்கு வந்து விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மயில்கள் அனைத்தையும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு விவசாய நிலத்திலேயே குழி தோண்டி  புதைத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஐம்பது மயில்கள் இறந்ததற்கு காரணமாக இருந்த ஜான்சன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.குறிப்பாக சங்கரன்கோவில், சிவகிரி, புளியங்குடி, வாசுதேவநல்லூர், கரிவலம், தேவிபட்டிணம் ஆகிய  பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கண்டுகொள்ளாமல் வனத்துறையினர் உள்ளனர்.

எனவே தமிழகஅரசு தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வனவிலங்குகள் வேட்டையினை தடுத்து அலட்சியமாகவும், மெத்தனமாகவும் செயல்பட்டு வரும் மாவட்ட வனத்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.