திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரிதன்யா, ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சவிதா, வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரைச் சேர்ந்த சரண்யா என கடந்த வாரத்தில் மட்டும் திருமணம் ஆகிய மூன்று இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களுக்காக தவறான முடிவெடுத்திருக்கிறார்கள்.அடுத்தடுத்து அவசரப்பட்டு முடிவெடுத்தது இந்த மூன்று பேர் மட்டும் அல்ல..கடந்த ஜூன் மாதம் முழுக்க கவனித்தால் குறைந்தது 50ஐ தாண்டும். சமூகத்தில் என்ன நடக்கிறது.. இதற்கு என்ன தான் தீர்வு என்பதை பார்ப்போம்.
கடந்த சில நாட்களாகவே திருமணம் ஆன புதிதில் அடுத்தது பெண்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணத்திற்காக இந்த முடிவுகளை எடுத்தாலும், தவறு தான். வாழ்க்கையை வாழ்வதற்கு தான் ஒருவருக்கு உரிமை இருக்கிறதே தவிர, அதனை அழித்துக்கொள்வதற்கு உரிமையில்லை. இயற்கை தான் அதனை முடிவு செய்ய வேண்டும். மாறாக சின்ன சின்ன பிரச்சனைக்கு எல்லாம் தவறான முடிவெடுக்கிறார்கள். சிலர் பெரிய சிக்கல்களை கையாள வழி தெரியாமல் முடிவெடுக்கிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரிதன்யா, ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சவிதா, வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரைச் சேர்ந்த சரண்யா என கடந்த வாரத்தில் மட்டும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேலூர் சரண்யா
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 30 வயதாகும் ஆனந்தன் என்பவர் அதே பகுதியில் கணினி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆனந்தனுக்கு சரண்யா என்ற பெண்ணுடன் (29) ஐந்து வருடம் முன்பு திருமணம் நடந்தது. ஆனந்தன் சரண்யா தம்பதிக்கு 3 வயதில் சஞ்சீவன் என்ற மகனும், 1 வயதில் தமிழ் யாழினி என்ற மகளும் உள்ளனர். ஆனந்தனுக்கு கடந்த ஜூன் 27ம் தேதி பிறந்தநாள் என்பதால் அவரது மனைவி குடும்பத்தாருடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என கணவரை அழைத்தாராம்.அதற்கு ஆனந்தன் ‘கம்ப்யூட்டர் சென்டரை’ திறந்து வைத்து விட்டு வருவதாக பதில் கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சரண்யா, திடீரென வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று தூக்கிட்டு உயிரையே விட்டுவிட்டார். தனது தாய் இருந்த கோலத்தை பார்த்த மகன் சஞ்சீவன் கால்களை பிடித்து அம்மா, அம்மா என கதறி அழுதான். அவனது கதறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றபோது சரண்யா தூக்கில் தொங்கியதையும் 3 வயது மகன் அவரது கால்களை பிடித்து கதறியதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து சரண்யாவை தூக்கிலிருந்து மீட்டிருக்கிறார்கள்.
திருப்பூர் ரிதன்யா
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த தொழில் அதிபர் அண்ணாதுரை பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மகள் ரிதன்யாவுக்கு 27 வயது ஆகிறது. இவருக்கும், கைகாட்டிபுதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த குடும்பமான ஈஸ்வரமூர்த்தி-சித்ரா தேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பு கல்யாணம் நடந்தது.திருமணத்தின் போது வரதட்சணையாக ரிதன்யா வீட்டில் 500 பவுன் நகை தருவதாக கூறி 300 பவுன் நகை போட்டார்களாம். ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் ரூ.2.5 கோடி செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் இவ்வளவு செய்தும், ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை. மாமனார் ஈஸ்வரமூர்த்தி (51), மாமியார் சித்ராதேவி (47) ஆகிய இருவரும் ரிதன்யாவிடம் மீதமுள்ள 200 பவுன் நகை இன்னும் தரவில்லை என்று கூறி டார்ச்சர் செய்தார்களாம். மேலும் வேலைக்கே செல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும் மாதம் பல லட்சம் வருமானம் வருகிறது என்பதால், கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரும் வீட்டில் தான் இருப்பார்களாம். அவர்கள் மூன்று பேரும் ரிதன்யாவை டார்ச்சர் செய்தார்களாம். இதனால் காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற ரிதன்யா வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
ஈரோடு சவிதா
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை சூடமுத்தான்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவர் கோனேரிப்பட்டி பிரிவு பகுதியில் ஹார்டுவேர் கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி சவிதாவுக்கு 23 வயது ஆகிறது. இவர்களுக்கு திருமணமாகி 3.5 ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது.இந்நிலையில் கோபி அருகே கூகலூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு வருவதாக சவிதா கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் தாய் வீட்டுக்கு சென்று விட்டு வருவதாக சவிதா, கிருஷ்ணனிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் மதியம் செல்லலாம் என கூறிவிட்டு கடைக்கு சென்றாராம் இதனால் சவிதா மனமுடைந்து வீட்டில் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
மன நல ஆலோசகர்கள் கூறுவது என்ன?
பிரச்சனைகளை சமாளிக்க வழி இப்படி அடுத்தடுத்து பெண்கள் தவறான முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த மூன்று பேர் மட்டுமல்ல.. பல இளம் பெண்கள் இப்போது அடுத்தடுத்து அவசரப்படுவது நடக்கிறது. எப்படி 2ஜென் கிட்ஸ்களுக்கு அதிக செல்லம் கொடுத்து பெற்றோர்கள் பிள்ளைகளை கெடுத்துவிட்டார்களோ, அதுபோலவே 2கே கிட்ஸ்சுகளுக்கு, கஷ்டத்தையே காட்டாமல், பிரச்னை வரும் போது எப்படி சமாளிக்க வேண்டும். அவமானங்கள் வந்தால் எப்படி வெகுண்டெழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்காமலேயே 80ஸ் கிட்ஸ் பெற்றோர் வளர்த்துவிட்டார்கள். அதுதான் இப்போது பல இளம் பெண்களின் வாழ்க்கையில் புயலை வீசுகிறது. அதேநேரம் எந்த பிரச்னை என்றாலும் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எவருக்கும் உரிமை கிடையாது. கணவன் மனைவி பிரச்னை பொதுவாகவே கணவன் மனைவி இடையே ஏற்படும் உறவு சிக்கல்களுக்கு முக்கிய காரணம். இருவருக்கும் இடையே விட்டுக்கொடுத்து செல்லும் தன்மை குறைவு தான். தவறுகள் நடந்தால் ஒருவருக்கு ஒருவர் உணர்ந்து மாறி மாறி வருத்தம் தெரிவித்து, அது மீண்டும் நடக்காமல் இருக்கலாம் என்று இருவரும் யோசித்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல் சில நேரங்களில் குடும்ப உறவுகளால் இருவருக்கும் இடையே பிரச்னை வரும். அதனை இருவருமே கவனமாக கையாண்டு, கணவன் மனைவி பிரச்னையில் இருவரும் தலையிடாமல் இருக்க செய்ய வேண்டும். தீர்வு என்ன அதேபோல் குடிபோன வீட்டில் எதுவும் சரியில்லை என்றால், தைரியமாக கூறலாம். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று அநியாயத்தை சகித்துக் கொள்ள தேவையில்லை. அவமானங்களையும், அடிமைத்தனத்தையும் ஏற்கத்தேவையில்லை. பெற்றோரிடம் சொல்லி, வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்ந்து, வேறு வாழ்க்கையும் ஏற்படுத்தலாம். அதேநேரம் சின்ன சின்ன தவறுகளுக்காக, முட்டாள்தனமாக முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்வது மிகப்பெரிய தவறு. இரண்டிலும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என் மன நல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 2464 0050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)