ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை 9 மணி நிலவரப்படி, 10.82% ஓட்டுகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 16.54% ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

நாட்டின் 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது.மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதை அடுத்து, 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இதுவரை நடந்த ஐந்து கட்ட தேர்தல்களில், 427 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்து உள்ளது. இந்நிலையில், ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில், இன்று ஆறாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதன்படி, ஹரியானாவில் 10; ஜார்க்கண்டில் 4; ஒடிசாவில் 6; உ.பி.,யில் 14; பீஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 8 மற்றும் யூனியன் பிரதேசங்களான டில்லியில் 7, ஜம்மு – காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது.

மாநில வாரியாக, காலை 9 மணி நிலவரம்

பீஹார்- 9.66%,
டில்லி- 8.94%,
ஹரியானா- 8.31 %,
ஜம்மு காஷ்மீர்- 8.89%,
ஜார்க்கண்ட் – 8.89%
ஒடிசா- 7.43%,
உத்தரபிரதேசம்- 12.33%
மேற்குவங்கம்- 16.54%,

இதில், ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் ரஜோரி லோக்சபா தொகுதிக்கு, மே 7ல் ஓட்டுப்பதிவு நடக்கவிருந்த நிலையில், வானிலை காரணமாக, தேர்தலை இன்றைய தினத்துக்கு மாற்றி தேர்தல் கமிஷன் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

889 வேட்பாளர்கள்

ஆறாம் கட்ட லோக்சபா தேர்தலில், மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முக்கிய வேட்பாளர்களில், ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியில் பா.ஜ.,வின் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகிறார். அக்கட்சியின் மனோஜ் திவாரி, காங்., வேட்பாளர் கன்னையா குமார், வட கிழக்கு டில்லி தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜ.,வின் மேனகா, ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் ரஜோரி தொகுதியில், பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஹரியானாவில் பா.ஜ., சார்பில், கர்னால் தொகுதியில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், குருஷேத்ரா தொகுதியில் நவீன் ஜிண்டால் மற்றும் குர்கான் தொகுதியில் ராவ் இந்தர்ஜித் சிங் ஆகியோர் களம் காண்கின்றனர். கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல், ஜூன் 1ம் தேதி நடக்கிறது. அப்போது, எட்டு மாநிலங்களில், 57 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜூன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.