திருமண செயலில் பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து இளம்பெண் ஒருவர் மோசடி செயல்களில் ஈடுபட்டது தற்போது அம்பலமாகி இருக்கிறது. இளம் விவசாயியான கோவை நபர் கொடுத்த புகாரின் பேரில், குற்றம்சாட்டப்பட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தகவல் தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு நவீனமாக வளர்ந்திருக்கிறதோ அதே அளவுக்கு அதன் மூலம் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக திருமண செயலியில் இந்த மோசடிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

கோவையில் இதுபோன்ற ஒரு மோசடி சம்பவம் நடந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது கோவை பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவசாயம் செய்து வருகிறார். குடும்பம் நடத்தும் அளவுக்கு தேவையான வருமானம், சொத்து, நகை என எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் இவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பெண் எங்கும் கிடைக்கவில்லை. எனவே, மேட்ரிமோனி எனப்படும் திருமண செயலியில் பெண் தேடியிருக்கிறார். அங்குதான் பிரியா என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். இவர் எதிர்பார்த்த குணாதிசயங்களோடு பிரியா இருந்ததால் அவரை திருமணம் செய்துக்கொள்ள இளைஞர் விரும்பியுள்ளார். இந்த விருப்பம் பிரியா மீதான காதலாக மாறியிருக்கிறது.

சில நாட்கள் பழகிய பின்னர் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி இளைஞர் கேட்க.. பிரியாவோ, தனக்கு என ஒரு கடமை இருப்பதாக கதை விட்டிருக்கிறார். அதாவது தன்னுடைய அக்கா உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகவே இருப்பதாகவும், அவருக்கான மருத்துவ செலவை என்னால் தனியாக சரி செய்ய முடியவில்லை என்று புலம்பியிருக்கிறார். இளகிய மனம் கொண்ட விவசாய இளைஞர், தன்னால் முடிந்த உதவியை செய்வதாக கூறியுள்ளார். இப்படியாக ரூ.7 லட்சம் வரை இழந்திருக்கிறார். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் இளைஞரிடம் பேசுவதை இளம்பெண் பிரியா தவிர்த்து வந்திருக்கிறார். பின்னர் முற்றிலுமாக தனது பேச்சை துண்டித்திருக்கிறார்.

இதனால் அதிருப்தியடைந்த இளைஞர் சந்தேகத்தின் அடிப்படையில் பிரியா குறித்து விசாரித்திருக்கிறார். அவர் கொடுத்த நாமக்கல் முகவரியில் சென்று பார்த்தபோது அங்கு அப்படி ஒரு ஆள் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கிய காவல்துறை பிரியாவை கைது செய்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில் அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆகியிருக்கிறது என்பதும், தற்போது சேலத்தில் தனியாக வசித்து வருகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. கோவை இளைஞரை போலவே பலரை இவர் ஏமாற்றியிருக்கிறார் என்பதையும் போலிசார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். பிரியாவிடம் வேறு இளைஞர்கள் எந்தெந்த இளைஞர்கள் பணத்தை இழந்தள்ளனர் என்பது குறித்தும், பிரியாவுக்கு உதவியவர்கள் யார் யார் என்பதையும் தேடி வருகின்றனர். மேட்ரிமோனி செயலி உதவியுடன் விவசாய இளைஞரை ஏமாற்றி இளம்பெண் ஒருவர் ரூ.7 லட்சம் வரை அபேஸ் செய்துள்ள சம்பவம் கோவையில் பேசுபொருளாகியுள்ளது.