நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவரும் தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவரும் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகருமான இளங்கோவன், தனது அரசியல் குருவாக சிவாஜி கணேசனை ஏற்றிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை மருத்துவமனையில் காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் சாா்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், திடீரென அவரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சனிக்கிழமை காலை(டிச.14) தகவல்கள் வெளியான நிலையில், 10.12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமகன் ஈவெரா

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று பேரவை உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்தில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் , சென்னை மாநில கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.தந்தை பெரியாரின் சகோதரரின் மகனும், திராவிட இயக்க முன்னோடி தலைவர்களில் ஒருவரான சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத் – ஈ.வி.கே. சுலோசனா சம்பத் ஆகியோரின் திருமகன் என்ற அடையாளங்களுடன் இளம் வயதிலேயே காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிர களப்பணியாற்றினார். தனது அரசியல் குருவாக நடிகர் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்த இளங்கோவன் ஈரோட்டில் நகர அளவில் தொடங்கி மாவட்ட அளவில் பதவிகளை ஏற்று தொடர்ந்து படிப்படியாய் அரசியலில் தன் அறிவாற்றலாலும், கடும் உழைப்பாலும், உயர்ந்தவர் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் 1984-இல் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன், சிவாஜி கணேசன்

தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆரின் மரணத்தைத் தொடந்து, அவரது மனைவி ஜானகி முதல்வரானார். அவரது தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், காங்கிரஸ் ஆதரவளிக்க மறுத்துவிட்டது. அப்போதைய பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த அதிமுகவையே ஆதரிப்போம் என்று அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஜானகி அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் வாக்களிக்க வேண்டும் என நடிகர் சிவாஜி கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு காங்கிரஸ் தலைமை சம்மதிக்காத நிலையில், சிவாஜி ஆதரவு பேரவை உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர். அப்படி அறிவித்தவர்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முக்கியமானவர். பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி , தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கிய சிவாஜி, அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து 1989 சட்டப்பேரவை தேர்தலைச் சந்தித்தார். அப்போது, தமிழக முன்னேற்ற முன்னணி வேட்பாளராக பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நான்காவது இடமே கிடைத்தது. அதன்பிறகு பலமுறை கோபிச்செட்டி பாளையம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் தேர்தல் களங்களில் வெற்றி தோல்விகளைப் பெற்றிருந்த போதும், எந்தவொரு பேரவைத் தேர்தலிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டவில்லை.

தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இரண்டு முறை காங்கிரஸ் மாநில தலைவர், செயல் தலைவர் என ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட வகித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றியவர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளச்சி அடைய மிகவும் உறுதுணையாக இருந்தவர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சோதனைகள் ஏற்பட்ட காலங்களில் திறம்பட செயல்பட்டு காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர். காங்கிரஸ் கட்சியின் கம்பீர குரலாக ஒலித்தவர். ஓய்வறியாமல் உழைத்தவர். சிறந்த பேச்சாளர், உயர்ந்த தலைவர், தமிழ்நாட்டில் ஏராளமான கட்சி நிர்வாகிகளை, தொண்டர்களை தன் ஆதரவாளர்களாக பெற்றவர். கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து கட்சி தலைவர்களோடு அன்பாகவும் பாசமாகவும் பழகியவர். அனைவருடனும் எளிமையைாகவும், தோழமையாகவும் பழகக் கூடியவர்.

இந்த சூழலில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவெராவின் மறைவால், அந்த வாய்ப்பு அவருக்கு வந்திருந்தது என்றாலும், பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்ற அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளங்கோவன் சனிக்கிழமை(டிச.14) சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் பின்னர் நாளை சென்னை சத்திய மூர்த்தி பவனில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

முன்னதாக, ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் அவரின் மகன் திருமகன் ஈவெராவும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே மரணத்தை தழுவியது பேரதிர்ச்சிதான்…