“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை” என்பதைப்போல தன் இயல்பை எப்போதும் மாற்றாதவர் தான் ஆர்.டி.ஆர் என அழைக்கப்படும் ஆர்.டி.ராமச்சந்திரன். யார் இந்த ஆர்.டி.ஆர்?

2011 முதல் 2022 வரை அதிமுகவின் ஆற்றல்மிகு பெரம்பலூர் மாவட்ட செயலாளராகவும், 2016-2021 வரை குன்னம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இதற்கு முன்னர் பெரம்பலூர் அதிமுக நகர செயலாளராகவும், நகராட்சி துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து சிறப்பாக செயல்பட்டவர் ஆர்.டி.ஆர்.பெரம்பலூர் மாவட்டத்தில் 2016-2011 வரை திமுக கோலோச்சிய காலகட்டத்தில் ஆளுங்கட்சியின் அராஜகப்போக்குகளை எதிர்த்து களமாடியதிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசவை எதிர்த்து அரசியல் செய்ததிலும் ஆர்.டி.ஆர்-க்கு முக்கியப்பங்குண்டு என்றால் அது மிகையல்ல..

அதிமுகவில் கடந்த 2021-இல் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கியபோது இபிஎஸ்-ஓபிஎஸ் என அணிகள் பிரிந்தது. ஓபிஎஸ் அணியில் முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு சிட்டிங் எம்எல்ஏ-வுமான ஆர்.வைத்தியலிங்கமும் இருந்தார். தனக்கு அரசியலில் ஏறுமுகம் கொடுத்த ஆர்.வைத்தியலிங்கத்தின் கரங்களை மேலும் வலுப்படுத்த ஆர்.டி.ராமச்சந்திரனும் ஒபிஎஸ் அணியில் இணைந்து பணியாற்றி வருகின்றார். பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் கழக தோழர்களின் சுப, துக்க நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.
2021-க்கு பின்னர் ஆர்.டி.ஆர்-இன் பிறந்தநாள் விழா (ஆகஸ்ட்-15) மிகவும் கோலாகலமாக தன் ஆதரவாளர்களும், சில அதிமுகவினரும் கொண்டாடியுள்ளதை அறிந்து நாம் களத்தில் இறங்கி சில அதிமுக புள்ளிகளிடம் விசாரித்தோம். ஆம் இந்த வருடம் ஆர்.டி.ஆர்-இன் பிறந்தநாள் விழாவை மிகவும் தடபுடலாக கொண்டாடியுள்ளனர். அவர் மாவட்ட செயலாளராகவும், குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தபோது கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மனதார உதவிகளை செய்வார். மனுக்களுடன் வரும் பொதுமக்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும்.

ஆர்.டி.ஆர்-இன் அரசியல் சூழ்நிலை காரணமாக அவர் ஓபிஎஸ் அணிக்கு மாறிய பின்னரும் வருடா வருடம் அவர் பிறந்தநாளன்று மறைமுகமாக தொலைபேசியிலும், ரகசியமாக நேரிலும் சென்று முக்கிய அதிமுகவினர்கள் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். காரணம் கட்சிக்கு தெரிந்தால் தங்களை நீக்கிவிடுவார்கள் என்று தயங்கினர்.
இபிஎஸ்-ஒபிஎஸ் இணைப்பு அஸ்திரத்தை தேசிய கட்சி கையிலெடுத்துள்ளதால் இணைப்பு விரைவில் இருக்கும் என்கிறார்கள்.
ஆனால் இவ்வருடம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் “என்னதான் நடந்துவிடும் ஒரு கை பார்த்து விடுவோம்” என்று பெரம்பலூர் நால்ரோடு தொடங்கி துறையூர் சாலையிலுள்ள ஆர்.டி.ஆர்-ன் அலுவலகம் வரையிலும் வழிநெடுகிலும் பிளெக்ஸ் மற்றும் கட்அவுட்டுகள் வைத்து கலக்கி எடுத்துவிட்டனர். சுமார் ஆயிரம் பேர் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்ல ஆர்.டி.ஆர்-ன் அலுவலகத்துக்கே சென்றிருப்பார்கள். அங்கு கேக் வெட்டி ஆர்.டி.ஆர்-இன் பிறந்தநாளை கொண்டாடினார்கள். தனித்து வந்தால் தானே கட்சியை விட்டு நீக்குவார்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வந்தால் எத்தனை அதிமுகவினரை நீக்கிவிட முடியும்?

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக சந்திந்த மாபெரும் தோல்வியை நாம் அனைவரும் அறிவோம். எடப்பாடி பழனிசாமி தலைமையால் மட்டும் தனித்து வெற்றிபெற இயலாது என்பதற்கு இதுவே உதாரணம். இந்த உண்மையை தொண்டர்களும் புரிந்து கொண்டனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடாமல் இருந்தது அதிமுக தொண்டர்களை மேலும் சோர்வாக்கியுள்ளது. எப்போதும் தனி மரம் தோப்பாகாது என்றார்.
இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது ஆர்.டி.ஆர்-இன் இமேஜ் இன்னும் டல்லாகவில்லை என்றே தோன்றுகிறது..