பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கிழுமத்தூர் காலனியில் உள்ள வீரம்மாள் (80) என்பவருக்கு நேற்று காலை (ஜன 10) உடல்நிலை சரியில்லாததால் வீரம்மாள் உறவினர்கள் 108க்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அப்போது வீரம்மாள் வீட்டிற்கு செல்லும் வழியில் ராமசாமி என்பவர் தனது வயலில் விளைந்த கரும்புகளை வெட்டி டிராக்டர் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். அதனால் பாதை குறுகலாக இருந்ததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் அங்கேயே நின்று விட்டது.

சாலை மறியலால் நின்றுள்ள ஆம்புலன்ஸ்

இதனால் அந்த பகுதி மக்களுக்கும் ராமசாமி என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வராமல் மிக தாமதமாக வந்த குன்னம் தாசில்தார் கோவிந்தம்மாள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலையை செப்பனிட்டு தருவதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

பின்னர் வீரம்மாளை ஆம்புலன்ஸ் ஏற்றி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நல்ல வேலையாக மூதாட்டி பிழைத்துக் கொண்டார். இதனால் அந்தப் பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது..