ஒருபக்கம் சாகுபடியில் தீவிரம் மறுபக்கம் மொபைல் செயலி என இரட்டிப்பு வேகத்தில் தமிழக கூட்டுறவுத்துறை இறங்கியிருக்கிறது. பயிர்க்கடன் இலக்கை எட்டிப்பிடிக்க மும்முரம் காட்டியும் வருகிறது. தமிழக கூட்டுறவுத் துறையானது, பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், இடுபொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக, கூட்டுறவு துறை வாயிலாக பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ள நிலையில், நடப்பாண்டு, 16,000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இதனை செயல்படுத்தும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகள் வாரியாக குறியீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதேபோல, பயிர்க்கடனில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும், பட்டியலின வகுப்பு, பழங்குடியினரின் நில உடமையின் அடிப்படையில், 20 சதவீதம் குறியீட்டினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிர்ணயம் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கி, ஆண்டு குறியீட்டினை முழுமையாக எய்திட தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர கூட்டுறவு சங்கங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன், நகைக்கடன், மத்திய காலக்கடன், பண்ணைசாராக்கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற 17 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, அந்தந்த கடனுக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் அனைத்து விதமான கடன்களையும் பெற்று பயனடையலாம் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு கடன்: ரூ.2 லட்சம் கடன் பெறலாம்.2. நகை கடன்: ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். கடன் கால அளவு: 1 வருடம். வட்டி 9.50 சதவிகிதம் ஆகும்.3. தனிநபர் கடன்: ரூ.15 லட்சம் வரை பெறலாம். கடன் கால அளவு 10 ஆண்டுகள், வட்டி விகிதம் 9.50 ஆகும்.4. பெண் தொழில்முனைவோர் கடன்: ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். வட்டி விகதம் 10 சதவிகிதம். கால அளவு 10 ஆண்டுகள்.5. சிறு, குறு தொழில்முனைவோர் கடன்: ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். வட்டி விகதம் 10 சதவிகிதம். கால அளவு 10 ஆண்டுகள்.6. வீட்டுக் கடன் 75 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி வீதம் 8.5 சதவீதமாக இருப்பதுடன் இந்த கடனை அடைப்பதற்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.
இப்படி பயிர் கடன் இலக்கை முடிக்க, கூட்டுறவு துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவத்தில் இயல்பான அளவில் சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. பல மாவட்டங்களில் வறட்சி மற்றும் திடீர் மழையால் சாகுபடி நடக்கவில்லையாம். அதனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே பயிர் கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். இப்போதைக்கு டெல்டாவில் சம்பா பருவ நெல் சாகுபடி துவங்கியுள்ள நிலையில், தென்மேற்கு பருவமழையால், பல மாவட்டங்களில் அணைகள், ஏரிகளும் நிரம்பி வருகின்றன. இதனை பயன்படுத்தி, சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன்களை வழங்கி, இலக்கை பூர்த்தி செய்ய, கூட்டுறவு துறை திட்டமிட்டிருக்கிறதாம்.
ஆதார் எண், DCCB DMR கணக்கு எண், பான் கார்டு எண், ரேசன் அட்டை எண்ணுடன் சேர்த்து கடனுக்கு ஏற்ப அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மாறுபடுகின்றன. இவை அனைத்தையும் ‘கூட்டுறவு’ செயலியிலேயே பதிவிட்டு கடனுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய “கூட்டுறவு” (Kooturavu) என்ற செயலியை கூட்டுறவுத்துறை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ‘கூட்டுறவு’ செயலி மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி வீதம் 8.5 சதவீதமாக இருப்பதுடன் இந்த கடனை அடைப்பதற்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். முன்பெல்லாம் கூட்டுறவு பயிர் கடன்களை பெற, வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. இப்போது, புதிதாக மொபைல் போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், இந்த செயலிலிருந்தே பயிர் கடன்களை, விவசாயிகள் எளிதாக பெற முடியும்.
இந்த செயலி குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, இ்ந்த செயலியை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதால், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சற்று காலதாமதமாகினாலும், புதிய செயலி வாயிலாக இலக்கை விரைந்து அடைந்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
டிஜிட்டல் யுகத்தில் பின்தங்கியிருந்த கூட்டுறவுத்துறை செயலியை அறிமுகப்படுத்தி ஆன்லைனில் பயிர்க்கடன், வீடு கட்ட 75 லட்சம் வரை கடன் என தனது அதிரடியை துவக்கியுள்ளது.