தமிழ்நாடு பதிவெண் இல்லாமல் வெளிமாநில பதிவெண்களோடு இயங்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு வரும் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அதிரடியாக அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. அரசு பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மட்டுமல்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகளும் மாநிலத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக திகழ்ந்துவருகிறது.குறிப்பாக, தலைநகர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி என மாநிலத்தின் முக்கிய மாநகரங்களுக்கு பயணிகளின் வசதிக்கேற்ப, சொகுசான போக்குவரத்து சேவைகளையும் வழங்கி வருகின்றன. அதேநேரம், வார இறுதி விடுமுறைகள், விழா காலங்கள், பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகப்படியான கட்டணம் வசூலித்து சட்ட விதிமீறல்களிலும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர் தொடர்ந்து ஈடுப்பட்டு வருவதாக எழும் குற்றச்சாட்டுகளும் தொடர்கிறது.
அதேபோல, தமிழ்நாடு போக்குவரத்துச் சட்டப்படி, தமிழ்நாடு (TN) பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்தான் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். ஆனால், கணிசமான ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல் அஸ்ஸாம் வரையிலான வெளிமாநிலங்களின் பதிவெண் கொண்டு பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கி வருகின்றனர்.
இந்த விதிமீறலாம் தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, `தமிழ்நாடு பதிவெண் இல்லாத ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கக்கூடாது, அப்படி இயக்கவேண்டுமானால் வெளிமாநில பேருந்துகளின் பதிவெண்ணை தமிழகப் பதிவெண்ணாக மாற்ற வேண்டும்’ என தமிழ்நாடு போக்குவரத்து துறை பல ஆண்டுகளாக தனியார் போக்குவரத்து உரிமையாளர்களையும் சங்கத்தினரையும் வலியுறுத்திவருகின்றனர். மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கால அவகாசத்தையும் நீட்டி வந்தனர். ஆனால், கணிசமான பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து வெளிமாநில பதிவெண்ணுடனே தங்களின் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு இறுதியில் தமிழக போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முகசுந்தரம் ஓர் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, `தமிழ்நாட்டில் சுமார் 652 ஆம்னி பேருந்துகள் வெளிமாநில பதிவெண் கொண்டு இயங்கி வருகின்றன. இந்த ஆம்னி பேருந்துகளால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.28.16 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழ்நாடு பதிவெண்ணாக மாற்ற வேண்டும். இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், சங்கத்தினரின் கோரிக்கைக்கு ஏற்ப 2023 டிசம்பர் 16-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, டிசம்பர் 16-ம் தேதி நள்ளிரவுக்கு மேல், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளைத் தமிழ்நாட்டில் இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!” என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும், அரசின் உத்தரவை மதிக்காமல் பல்வேறு ஆம்னி பேருந்துகள் பழைய பதிவெண்களிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் வரும் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவோடு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க தடை விதிக்கப்படுவதாகவும், எனவே பயணிகள் தங்களின் பயணத்துக்கு இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம், “மத்திய மோட்டார் வாகனச் சட்டம்1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஏஐடிபி) வழங்க அதிகாரம் அளித்துள்ளது.
இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் பயணிகள் பேருந்துகள்போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயணச்சீட்டுகளை வழங்கி, கட்டணத்தை வசூலிக்கின்றன. இவ்வாறு நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன.எனவே, ஏஐடிபி வாகனங்களின் இயக்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் ஜூன் 13 முதல் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும்.
அதில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் புறப்படும் இடம் மற்றும்சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பதோடு, அதிகாரிகளின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், மோட்டார்வாகன துறை, மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்துக்குள் பயணித்த விவரங்கள், சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் விவரம் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இவ்வகை அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து, டிஎன் என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழகத்துக்குள் இயங்க அனுமதி சீட்டும் பெற்றுள்ளன. மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி இயங்குகின்றன. எனவே வரும் 14-ம் தேதி நள்ளிரவு முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது.
எனவே முறையற்ற வகையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும்தவிர்க்க வேண்டும். மீறி பயணம்செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று முறையாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் அதற்குரிய சான்றுகளை வாகன தணிக்கையின்போது காண்பிக்க வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கிறார்