கர்நாடகாவையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் ஆபாச வீடியோக்கள் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் லோக்சபா தொகுதி பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பெண் ஒருவர் தற்போது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் பிரஜ்வல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் தொகுதியில் ஜேடிஎஸ் கட்சியின் எம்பியாக உள்ளவர் பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். அதாவது தேவகவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மகன் தான் பிரஜ்வல் ரேவண்ணா. இதேபோல் ரேவண்ணாவின் உடன் பிறந்த தம்பிதான் முன்னாள் முதல்வர் குமாரசாமி.

லோக்சபா தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதையடுத்து மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியிலேயே போட்டியிட்டுள்ளார். ஹாசன் தொகுதிக்கு கடந்த 26-ம் தேதி நடந்த 2 ஆம் கட்ட லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகியுள்ளது. பிரஜ்வல் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ்அப்களில் ஹாசன் தொகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பரவியது. அதோடு பெண்களை ஆபாசமாக காட்டும் வீடியோக்களும் இருந்தன.

உதவி கேட்டு வரும் பெண்கள், பழக்கமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருந்தபோது அதனை வீடியோவாக எடுத்து பென் டிரைவில் வைத்திருந்ததாகவும் அந்த வீடியோ தான் வெளியானதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பூகமப்பத்தையே கிளப்பி விட்டுருக்கிறது. எனினும், இவை அனைத்து மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் என்று பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு இதனை மறுத்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ தொடர்பாக எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்க சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில், வீடியோ வெளியானதால் தற்போது பிரஜ்வல் ரேவண்னாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பெண் ஒருவர் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹோலனரசிபுர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வரும் பிரஜ்வல் ரேவண்னாவின் சித்தப்பாவுமான குமாரசாமி இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், “நானாக இருந்தாலும் சரி.. எனது தந்தை தேவகவுடாவாக இருந்தாலும் சரி.. பெண்களை மரியாதையாகவே நடத்தியுள்ளோம். யாராவது பாதிக்கப்பட்டு வந்திருந்தால்.. அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவே முயற்சி செய்து இருக்கிறோம். ஹாசன் விவகாரத்தில் விசாரணையின் உண்மைகள் வெளிவரட்டும். யாராக இருந்தாலும் சரி… தவறு செய்து இருந்தால் சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடம் இல்லை. எனவே, விசாரணையில் உண்மை வெளிவரட்டும். அதன்பிறகு நான் கருத்து சொல்கிறேன்” என்றார்.

கர்நாடகாவில் லோக்சபா முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 26ம் தேதி முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெற நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் புகாருக்கு உள்ளானது பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர்.