நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா, தமிழக எல்லையில் இருப்பதால், இந்த பகுதியை பனீஷ்மெண்ட் ஏரியா என்பார்கள். சமவெளிப்பகுதிகளில் புகார்களுக்கு ஆளாகும் அதிகாரிகளை, அது எந்த துறையாக இருந்தாலும் இந்த பகுதிக்குத்தான் டிரான்ஸ்பர் போடுவார்கள். ஆனால் நிலமை வேறு. பந்தலூர் பகுதிக்கு வந்தால் இருக்கும் கடனையெல்லாம் கட்டிவிட்டு, வீடு, தோட்டம் வாங்கி செட்டில் ஆகிவிடலாம் என்பதுதான் உண்மை. அதில் லேட்டஸ்ட் வசூல் மன்னனாக வலம் வந்தவர் தாசில்தாராக பதவி வகித்து வந்த நடேசன். 2017-18 ம் ஆண்டு பந்தலூர் டவுன் வருவாய் ஆய்வாளராக பொறுப்பேற்று மிக சிறப்பாக பணியாற்றினார்.

ஆனால் நாட்கள் நகர நகர பந்தலூரை சேர்ந்த பேபி, அப்பாஸ் ஆகிய புரோக்கர்களுடன் கை கோர்த்து, வருவாய் பார்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து, துணை தாசில்தாரராக பதவி உயர்வு பெற்று, குந்தா தாலுக்காவிற்கு சென்றார். அங்கு வசூல் குறையவே, பல காரணங்களை கூறி மீண்டும் பாந்தலூர் வந்தார். அங்கு தலைமையிட துணை தாசில்தார், வழங்கல் அலுவலர் பதவிகளில் வசூல் பார்த்த நடேசனுக்கு மீண்டும் அடித்தது பம்பர் பரிசு. அதுதான் 2022-ம் ஆண்டு ஜனவரியில், தாசில்தார் பதவி. பந்தலூர் தாலுக்கா தாசில்தாரராக பொறுப்பேற்ற நடேசன், அரசு வாகனத்தில் ரவுண்ட்ஸ் போனார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. டிரைவர் ஜெயக்குமார், துணையுடன் பந்தலூர் தாலூக்கா முழுவதும் அனுமதியின்றி மண் கடத்தல், ஆபத்தான மரம் என்ற போர்வையில் மரக்கடத்தல், காசு கொடுத்தால் சொத்தே இல்லாவிட்டாலும் சொத்து மதிப்பு சான்றிதழ், வீடில்லாத ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் நத்தம் புறம்போக்கு நிலங்களை லட்சாதிபதிகளுக்கு பட்டா போட்டு கொடுப்பது என வசூல் மழையில் நனைந்து, இப்போது கோடீஸ்வரனாகி விட்டாராம்.

இவரின் வசூல் வேட்டை, விதிமீறல் செயல்கள் குறித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் ஏனோ முந்தைய நீலகிரி கலெக்டர் மவுனமாகவே உள்ளார் என்கிறார்கள். நேர்மையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என்று நினைத்தால், பழங்குடியினர் நலத்துறையில் கூடலூர் தாசில்தாரராக பொறுப்பு கொடுத்து, பழங்குடியினரின் நிதியையும் கொஞ்சம் சுருட்டுங்கள் என்று பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளார். இதனால் என்னைய என்ன செய்ய முடியும் என்று திமிராக வலம் வருகிறார் நடேசன். இவரின் சொந்த ஊரான தென்காசி பாம்புகோவில் பகுதியில், சொந்தமாக வீடு கட்டி வருவதுடன், அதற்கு தேவையான பர்னிச்சர்களை கூட பந்தலூர் பகுதியிலிருந்து கொண்டு செல்வதாக லேட்டஸ்ட் தகவலும் வந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை நடேசன் மீது கொஞ்சம் கண் வைத்தால் நல்லது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

-மலையரசன்.