அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கமலா ஹாரிஸுக்கு பெரிய லீட் கிடைத்துள்ளது. இந்த லீட்டை அவர் தக்கவைத்துக் கொண்டால் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெல்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே இப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கும் வித்தியாசம் குறைவு தான் என்ற போதிலும் இது தொடர்ந்து ஜனநாயக கட்சிக்குச் சாதகமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸ் 4% முன்னிலையில் இருக்கிறார்.
நேற்று ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக வந்துள்ள இந்த சர்வே முடிவுகள் ஜனநாயக கட்சியினருக்கு உற்சாகம் தருவதாக இருக்கிறது. இன்று தொடங்கும் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு வரும் ஆக. 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோவில் நடக்கும் இந்த தேசிய மாநாட்டில் தான் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட இருக்கிறார்.இப்போது வந்துள்ள இந்த சர்வேயில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு 49%ஆக இருக்கிறது. அதேநேரம் டிரம்பின் ஆதரவு 45% ஆக இருக்கிறது. கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருந்தால் கூட இரு தரப்பிற்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. பைடன் இருந்த வரை மாற்றுக் கட்சியை நோக்கிச் சென்றவர்கள் இப்போது மீண்டும் ஜனநாயக கட்சியை நோக்கி வருவதையே இது காட்டுகிறது.
முன்னதாக ஜூலை மாதம் நடத்தப்பட்ட சர்வேயில் டிரம்ப் 43% ஆதரவுடன் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது பைடனுக்கு 42% ஆதரவும், மாற்றுக் கட்சியினருக்கு 9% ஆதரவும் இருந்தது. இப்போது டிரம்பின் ஆதரவு அதிகரித்துள்ள போதிலும், மாற்றுக் கட்சியினருக்கான ஆதரவு வெகுவாக குறைந்துள்ளது. தற்போது கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருந்தாலும் போட்டி கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.குறிப்பாக மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின், வட கரோலினா, ஜார்ஜியா, அரிசோனா மற்றும் நெவாடா ஆகிய ஏழு மாகாணங்களில் போட்டி கடுமையாக இருக்கிறது. இந்த ஏழு மாகாணங்களில் யார் வெல்கிறார்களோ.. அவர்களே அதிபர் தேர்தலில் வெல்லும் வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாகாணங்களில் கிட்டத்தட்ட அனைத்திலும் கமலா ஹாரிஸ் தான் இப்போது முன்னிலையில் இருக்கிறார். முன்பு ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிட இருந்தது. அப்போது பைடன்- டிரம்ப் இடையே விவாதம் நடந்த நிலையில், அதில் பைடன் செயல்பாடு மிக மோசமாக இருந்தது. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதையடுத்து பலரும் பைடன் ரேஸில் இருந்து விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் கடந்த மாதம் இறுதியில் அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னரே கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கமலா ஹாரிஸ் சீனுக்குள் வந்த பிறகு ஜனநாயக கட்சிக்கான ஆதரவு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது வரை கமலா ஹாரிஸ் தான் முன்னிலையில் இருக்கும் நிலையில், இதே டிரெண்ட் தொடர்ந்தால் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெல்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது