ஜிஎஸ்டி சீரமைப்பு இன்று அமலுக்கு வந்துள்ளது. நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தற்போது ஈரடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? அதனை எவ்வாறு தெரிந்து கொள்வது? விலை குறைப்பு செய்யப்படவில்லை என்றால் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே அறியலாம்.

மோடி, நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், ஜிஎஸ்டி வரியில் 12% மற்றும் 28% ஆகிய அடுக்குகள் நீக்கப்பட்டன. 5% மற்றும் 18% புதிய விகிதங்கள் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டது.புதிய ஜிஎஸ்டி அமலாவதை முன்னிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அவர் தன் உரையில், “நவராத்திரியின் முதல் நாளான நாளை (இன்று) அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாகின்றன. அப்போதிலிருந்து நாட்டில் சேமிப்பு திருவிழா தொடங்கவிருக்கிறது. இந்த சேமிப்பு திருவிழாவில் உங்களின் சேமிப்புகள் அதிகரித்து, உங்கள் விருப்பப்படி பொருட்களை எளிதாக வாங்க முடியும்.” என்றார்.”வீடு கட்டுவது முதல் தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, இருசக்கர வாகனம் என அனைத்தையும் நடுத்தர மக்களால் வாங்க முடியும். பயணம் மேற்கொள்ளவும் செலவு குறையும்,” எனத் தெரிவித்தார்.

புதிய ஜிஎஸ்டியின்படி 375 பொருட்களின் விலை குறையும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி, வீடுகளில் அன்றாடம் உபயோகிக்கப்படும் பல பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி 2.0: பொருட்கள் விலை குறைப்பை நீங்கள் எப்படி அறியலாம்?

எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

  • ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை, டாய்லெட் சோப் பார், டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, டெய்ரி ஸ்ப்ரெட்
  • பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள், புஜியா கலவை, பாத்திரங்கள், குழந்தைகளுக்கான பாலூட்டும் பாட்டில்கள், நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள்

13% வரை வரி குறைப்பு

நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும்

  • ஹேர் ஆயில்
  • ஷாம்பு
  • பற்பசை
  • டாய்லெட் சோப் பார்
  • டூத் பிரஷ்
  • ஷேவிங் கிரீம்

ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சமையலுக்கும், நேரடி பயன்பாட்டுக்கும் உபயோகிக்கப்படும்

  • வெண்ணெய்
  • நெய்
  • பாலாடைக்கட்டி
  • டெய்ரி ஸ்ப்ரெட்
  • பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள்
  • புஜியா
  • மிக்சர் போன்ற நொறுக்குத் தீனிகள்

ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி 2.0: பொருட்கள் விலை குறைப்பை நீங்கள் எப்படி அறியலாம்?

விலை குறைப்பை மக்கள் எப்படி தெரிந்துகொள்ளலாம்?

“நிறைய பொருட்களின் விலை தானாகவே குறைந்துவிடும். மக்கள் கடைகளுக்கு சென்று வாங்கும்போதே அதை தெரிந்துகொள்ளலாம். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை குறையும். பிஸ்கட் முதல் பலவகையான உணவுப்பொருட்கள், இருசக்கர வாகனங்கள், மக்கள் அணியும் காலணிகள், ஆடைகள் என பலவற்றின் விலை குறையும்” என்கிறார் பொருளாதார நிபுணர் ஷ்யாம் சேகர்.

பெரிய நிறுவனங்கள் விலை குறைந்ததை வெளிப்படையாக தெரிவிக்கும் எனக் கூறும் ஷ்யாம் சேகர், இதனால் அவர்களுக்கும் வணிகம் அதிகரிக்கும் என்றார்.”திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகளின்படி, இத்தகைய அன்றாடம் உபயோகிக்கப்படும் பலவித பொருட்களிலும் 7-10% விலை குறையும்.” என அவர் கூறினார்.பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் அமுல் நிறுவனம் 700க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால் பல பொருட்களின் விலை ஒரு ரூபாய் முதல் 15 ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஏற்கனவே உள்ள பொருட்களின் விலை குறையுமா?

நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களிடம் ஏற்கெனவே உள்ள சரக்குகளிலும் புதிய ஜிஎஸ்டிக்கு ஏற்ப விலையை ஸ்டிக்கர் மூலம் ஒட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.என்றாலும் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுவது கட்டாயம் இல்லை என்றும் அந்த அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

“பெரிய நிறுவனங்களில் டிஜிட்டல் பலகைகள் வைப்பார்கள். சிறிய கடைகளில் விலை மாற்றத்தை தெரிந்துகொள்வது சிக்கலாகத்தான் இருக்கும். ‘கடையில் ஏற்கெனவே இருக்கக்கூடிய சரக்குகளுக்கு இது பொருந்தாது, புதிய சரக்குகள் வந்தபின்னர் தான் விலை குறையும்’ என வணிகர்கள் சொல்ல முடியாது. புதிய ஜிஎஸ்டி படிதான் விற்க வேண்டும்.” என கூறுகிறார் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்.

“பொருட்களில் ஸ்டிக்கர் யார் ஒட்டுகிறார் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். நிறுவனம் தான் அதை ஒட்ட வேண்டும். வணிகர்கள் அதை செய்ய முடியாது. ஸ்டிக்கர் எளிதில் கிழிந்துவிடும் என்பதால், கருப்பு மை கொண்டு பொருட்களில் அச்சிட்டு விலையை திருத்தலாம்.” என்றார்.

ஜிஎஸ்டி 2.0: பொருட்கள் விலை குறைப்பை நீங்கள் எப்படி அறியலாம்?

கிட்டத்தட்ட 500 பொருட்களின் விலை குறைந்துள்ளதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். பொருட்களின் விலையை திருத்தும் பணி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

விக்கிரமராஜா அனுப்பிய பட்டியலில் இருந்து கீழே உள்ள விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

  • நோட்டு புத்தகம்
  • பென்சில்
  • ஆயில் பேஸ்டல்ஸ்
  • ஷார்ப்னர்
  • கிரயான்ஸ்
  • பன்னீர்
  • யுஹெச்டி பால்
  • சப்பாத்தி

ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.

அதேபோன்று,

  • பிஸ்கெட்
  • வெண்ணெய்&நெய்
  • நூடுல்ஸ்
  • பாஸ்தா
  • கார்பனேற்றம் செய்யப்படாத ஜூஸ்
  • குழந்தைகள் டயாப்பர்
  • தக்காளி சாஸ்
  • மயோனைஸ்
  • ஜாம்ஸ் & ஸ்பிரெட்ஸ்
  • சாசேஜஸ்

ஆகிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

  • காபி பவுடர்
  • ஹெல்த் டிரிங்க்
  • கார்ன் பிளேக்ஸ்
  • ஓட்ஸ், சாக்லேட்
  • ஐஸ்க்ரீம்
  • குளியல் சோப்
  • ஷாம்பூ
  • பற்பசை
  • டூத் பிரஷ்
  • ஹெல்த் கேர் (விக்ஸ், அமுர்தாஞ்சன், ஏக்ஸ் போன்றவை)
  • ஷேவிங் கேர் (ஷேவிங் பிளேடு, க்ரீம், லோஷன் போன்றவை)

ஆகிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 5% ஆக குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி 2.0: பொருட்கள் விலை குறைப்பை நீங்கள் எப்படி அறியலாம்?

விலை குறைக்கப்படவில்லை எனில் என்ன செய்வது?

புதிய ஜிஎஸ்டியின்படி விலை குறைக்கப்படவில்லை என்றால், அது சட்டவிரோதமானது, தண்டனைக்குரியது என்கிறார் பாலசுப்ரமணியன். ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 171-ன்படி, அதை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

வணிக வரி அலுவலகம், மாவட்ட நுகர்வோர் அதிகாரி, மாவட்ட விநியோக அதிகாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இதுகுறித்து புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். www.consumerhelpline.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.