திருப்பூர் மாவட்ட திமுகவினருக்கு மூலனூர் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது திருப்பூர் தெற்கு திமுக மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன்தான்!அதேபோல மூலனூரில் இல.பத்மநாபனின் முரட்டுபக்தன் யார் என்று கேட்டால் மக்கள் க.தண்டபாணி என்பார்கள்! யார் இந்த மக்கள் க.தண்டபாணி?
25 வருடங்களுக்கு முன்னால் திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்து தனது கழகப்பணியால் மூலனூர் பேரூர் கழக திமுக செயலாளராகவும், அமைச்சர் சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர்களின் நம்பிக்கைக்குரியவராகவும் தற்போதைய மூலனூர் பேரூராட்சி தலைவருமாக இருப்பவர்தான் மக்கள் க.தண்டபாணி.
தமிழகத்தில் 2020 இல் நடைபெற்ற பேரூராட்சி தேர்தலில் மூலனூர் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலர்களுக்காக போட்டியிட்ட வேட்பாளர்கள்தான், தமிழ்நாட்டிலேயே அதிகமாக செலவு செய்திருப்பார்கள் என்கின்றனர்? வார்டு கவுன்சிலருக்கு இவ்வளவு போட்டியா.. இவ்வளவு செலவா.. என மலைத்திருந்தனராம் அப்பகுதி மக்கள்.
மூலனூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். மிகவும் பரந்து விரிந்த பெரிய பேரூராட்சியாக உள்ளது. மக்கள் க.தண்டபாணி ஏற்கெனவே 2006-2011, 2011-2016 என இரண்டு முறை திமுக சார்பில் போட்டியிட்டு 2வது வார்டில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2006-2011 வரை கவுன்சிலராக இருந்தபோது குடிநீர், தெருவிளக்குகள், சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் என அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்தார்.
2011 இல் நடைபெற்ற மூலனூர் பேரூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே ஒரு திமுக வார்டு உறுப்பினர் மக்கள் க.தண்டபாணி மட்டுமே. பேரூராட்சியில் திமுகவுக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும் தனிநபராக களத்தில் நின்று தனது வார்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், திட்டங்களையும் போராடி பெற்றுக்கொடுத்துள்ளார் என்கின்றனர்.
அதன்பிறகு நடைபெற்ற 2020 பேரூராட்சி தேர்தலில் 3வது வார்டில் போட்டியிட்ட மக்கள் க.தண்டபாணியை எப்படியும் தோற்கடிக்கப்பட வேண்டும். வெற்றிபெற்றால் கண்டிப்பாக தலைவராகி விடுவார் என லோக்கல் அதிமுகவின் மூன்று பெரும் தலைகள் ஒன்று சேர்ந்து வைட்டமின் ப-வை கோடிகளில் வாரி இறைத்துள்ளனர். கோடிகளை தனது கொள்கைகளால் எதிர்கொண்ட மக்கள் க.தண்டபாணிக்கு வாக்காளர்கள் மீண்டும் வெற்றிக்கனியை பரிசளித்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தனர். இதையடுத்து மூலனூர் பேரூராட்சி தலைவராக பதவியேற்றார்.
சரி, மக்கள் க.தண்டபாணி மூலனுர் பேரூராட்சிக்கு என்னென்ன வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளார் என விசிட் அடித்தோம்..அக்கரைப்பாளையம் ரோடு-கோட்டை மூலனூர் வரை 2 கோடியே 57 லட்சம் மதிப்பிலும், சோமன்கோட்டை-கோட்டை மூலனூர் வரை போளரை-சின்னக்காம்பட்டி ரோடு வரை பள்ளிபட்டி – குருசிடி மலை வழியாக பேரூராட்சி எல்லை வரை ராக்கியாவலசு – தாளக்கரை ரோடு வரை என 2 கோடி மதிப்பிலும், நாச்சிபாளையம் சாலை-புதுக்கோட்டை பிரிவு வரை புதுக்கோட்டை பிரிவு-கரூர் தாராபுரம் சாலை வரை 1 கோடியே 40 லட்சம் மதிப்பிலும், கரூர் தாராபுரம் சாலை-ஊரநாயக்கன் வலசு புதுகாலனி வரை கரூர் தாராபுரம் சாலை – ஊரநாயக்கன் வலசு பழைய காலனி வரையிலும் மற்றும் தாளக்கரை ஆதிதிராவிடர் காலனி வரை 97 லட்சம் மதிப்பிலும், 2வது வார்டு மேட்டுப்பட்டி – உத்தமகவுண்டன் வலசு சாலை வரை 49 லட்சம் மதிப்பிலும் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 9வது வார்டில் எஸ்.எம்.ஆர் மெயின்ரோடு குறுக்கு வீதிகளில் இருந்த மண்சாலையை அகற்றிவிட்டு 59 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைத்துள்ளனர். இதுமட்டுமல்ல, அனைத்து வார்டுகளிலும் முழுமையாக தார்ச்சாலைகள் அமைத்துள்ளனர்.
மேலும், 13வது வார்டில் உச்சனவலசு குறுக்கு வீதிகளில் 19.50 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தார்ச்சாலைகள் அமைக்க இயலாத இடங்களில் கான்கிரீட் சாலைகள், குறுகலான தெருக்களில் பேவர் பிளாக் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியைப் பொறுத்தவரை பழுதான சாலைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கின்றனர் ஏரியா வாசிகள்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான வாரச்சந்தையில் 3 கோடியே 13 லட்சம் மதிப்பில் கடைகள் கட்டியும், பேவர்பிளாக் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கிற்காக பல இடங்களில் பூங்கா கட்டியுள்ளனர். குறிப்பாக வார்டு எண் 6 இல் ஸ்ரீலட்சுமி நகரில் 35 லட்சம் மதிப்பில் பூங்கா கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.
குப்பைகளை மக்கவைத்து உரமாக்குவதற்கு ஏதுவாக மூன்று மீட்டருக்கு விண்டோ பிளாட்பார்ம் அமைக்கப்பட்டு 34.50 லட்சம் மதிப்பில் வளமீட்பு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உரங்கள் தயாரித்து மலிவு விலையில் விற்கப்படுகிறது.
இதையடுத்து, மக்கள் க.தண்டபாணியை சந்தித்தோம்.. பொதுவாக உள்ளாட்சி தேர்தலில் சாதி பார்த்தும், உறவினர்கள் என்றும் வாக்களிப்பார்கள். ஆனால் நான் வெற்றிபெற்ற 3 மற்றும் 2வது வார்டில் பலதரப்பட்ட பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள். அவர்கள் வேறு நான் வேறு அல்ல நாங்கள் ஒரு குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மக்களுடன் 17 வருடங்களாக நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றேன். எந்த கோரிக்கை என்றாலும் என்னிடம் உரிமையோடு கேட்பார்கள் அதை நான் உடனடியாக நிறைவேற்றித் தந்து வருகின்றேன்.
பேரூராட்சியின் உட்கட்டமைப்பு வசதிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றேன். அனைத்து வார்டுகளுக்கும் முறையாக தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு, தார்ச்சாலைகள், கான்கிரீட், பேவர்பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பல தார்ச்சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற இடங்களில் கம்பிவேலிகள் அமைக்கப்படுகிறது.
எதிர்கால திட்டங்கள்
மூலனூரை தனி வட்டமாக அறிவிக்க தீவிர முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அடர்த்தியாக வசிக்கும் இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. இதனை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 24 மணிநேரமும் செயல்படுத்தவும், பேருந்து நிலையம் மேம்பாடு செய்து நவீனப்படுத்தவும், பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள இடத்தை இணைத்து புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதோடு, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூலனூர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த தகுதியுள்ள 500 ஆதிதிராவிடர்கள் குடும்பத்திற்கு ஒரே இடத்தில் குடிசைமாற்று வாரியம் சார்பில் 500 அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது என பேரூராட்சித் தலைவர் மக்கள் க.தண்டபாணி, தனது எதிர்கால திட்டங்களையும் பட்டியலிட்டார்!
இப்பகுதி நீர் வறட்சியுள்ள பகுதி என்பதால், குடிநீர் குழாய்கள் விஸ்தரிப்பு செய்து தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய 6 அறுபதாயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் 10 முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டிகளைக் கொண்டு பற்றாக்குறையின்றி சீராக குடிநீர் விநியோகம் செய்து வருகின்றோம். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தனிநபர் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தெருக்களில் ஆங்காங்கே சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வழங்கப்படுகின்றது. அதோடு, தண்ணீர் பற்றாக்குறையுள்ள வார்டுகளில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பேருந்து நிலையம், பொதுக்கழிப்பிடங்கள், மேல்நிலைத்தொட்டிகள், திறந்த வெளிக்கிணறுகள், அரசு கூடங்கள், சாவடிகள் ஆகியவைகளில் ஏற்படும் பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகள் சரியாக மேற்கொண்டு வருகின்றோம். மேலும், சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு புதிய டிராக்டர் வாகனமும், கழிவுநீர் அகற்றும் வாகனம் 43 லட்சம் மதிப்பிலும், குறுகிய தெருக்களிலும் சுகாதாரப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள பேட்டரி வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் குப்பைகள் தேங்குவதில்லை. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுக்கழிப்பிடம் மற்றும் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டியுள்ளோம். தேவையான இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்காக குடிநீர் வழங்கல் திட்டம் மேம்பாடு செய்வதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் 30 கோடி ரூபாய் நிதியை எங்கள் பேரூராட்சிக்கு ஒதுக்கியுள்ளனர். இந்த திட்டத்திற்காக நான் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டேன். அமைச்சர் சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் எங்கள் பேரூராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கின்றனர்.
இந்த திட்டத்தால் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குறைந்த செலவில் குடிநீர் விநியோகம் செய்ய முடியும். அம்ருத் திட்டம் நடைபெற்று முடிந்த பின்னர் எங்கள் பேரூராட்சி தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்றிருக்கும் என்கிறார் பூரித்த முகத்துடன்!