காவல் பணியில் அறத்தோடும், பொதுவாழ்வில் சிரத்தோடும், என்றென்றும் எழுத்தோடும் பயணித்து வரும் நேர்மையாளர் தாம்பரம் மாநகர போலீஸ் சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ். திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.கிராமப்புறபள்ளி, கல்லுாரி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக தனது பெற்றோர் வாழ்ந்த பூர்வீக வீட்டை நூலகமாக மாற்றியுள்ளார்.

இவரின் தந்தை பால்சாமி 2020ல் மறைந்தார். இவரது நினைவாக அவர் வாழ்ந்த பூர்வீக வீட்டை, கிராம பள்ளி குழந்தைகளுக்கான, பொதுமக்களுக்கான நூலகமாக மாற்றி, அதன் பராமரிப்பு பொறுப்பிற்கும் ஏற்பாட்டை செய்துள்ளார். இந்த நூலகத்திற்கு “பாலாபடிப்பகம்” எனப் பெயரிட்டு தன் தந்தையை நினைவுகூர்ந்துள்ளார்.

தனக்கு கிடைக்கத் தவறிய கல்வி, வசதியற்ற ஏழை, எளிய குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என தன் தந்தை எண்ணியுள்ளார். தன் தந்தையின் எண்ணத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, தங்கள் பூர்வீக வீட்டில், 1,000 சதுரடி கட்டடத்தை நூலகமாக மாற்ற வழங்கியுள்ளார். மேலும், வக்கம்பட்டி ஊர் மற்றும் சுற்றுவட்டார கிராம இளைஞர்கள் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இந்த படிப்பகம் பெரிதும் உதவுகிறது. அதற்கு தேவையான புத்தகங்கள்,பள்ளி மாணவர்களுக்கான நன்னெறி புத்தகங்கள், பெரியவர்களுக்கான பொது நுால்கள், நாவல்கள் வைத்துள்ளார்கள். நூலகத்தை கல்லூரி மாணவ, மாணவியர் நிர்வகிக்கிறார்கள். அவர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்குகிறார்.வீட்டுக்கு வெளியே உள்ள இரு பெரிய திண்ணைகளில் பெரியவர்கள் அமர்ந்து படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மாணாக்கர்களுக்கு தேவையானதை இன்டர்நெட் வாயிலாக பிரிண்ட் எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தன் தந்தையின் நினைவாக அவர் இறந்த ஒரே வாரத்தில் “சிந்தையில் எம்தந்தை” என்ற நூலை வெளியிட்டார். இதற்கு முன்னர் பெண்களைப் போற்றும் விதமாக “பெண்மை வாழ்க” என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு புத்தகங்களையும் வாசகர்களுக்கு இலவசமாகவே அளித்தார். மேலும், தனது எழுத்துப்பணியிலும் சேவையுணர்வோடு நூலாய்வோம் என தலைப்பிட்டு அவர் படித்த நல்ல நூல்களையும் தொடர்ச்சியாக சமூகவலைத்தளத்தில் விவரித்து வருகிறார்.

ஒருமுறை பிறக்கும் மனிதனின் பிறப்பு பிறருக்கும் பயன் சேர்க்க வேண்டும். ஒருமுறை வாழும் மனிதனின் வாழ்வு சமூகத்தில் சிறு நல் இசைவுகளையாவது ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதற்கான சான்றுதான் பா.மூர்த்தி ஐபிஎஸ்.

-க.சே.