உதவ வேண்டும் என்ற எண்ணம் பிறந்துவிட்டால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் உதவிடலாம் என்பதற்கு சான்றுதான் இந்த நிகழ்வு..

மொய்விருந்து போஸ்டர்

திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான். இவர் திண்டுக்கல்லில் 2 பிரியாணி கடைகளை நடத்தி வருகிறார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் கடந்த 7 ஆம் தேதி “கைகோர்த்து கை கொடுப்போம்” என்று மொய் விருந்து நடத்தி அதில் கிடைக்கும் தொகையை கேரள அரசுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

மெய் விருந்தில் சாப்பிடுபவர்கள்

இந்த மொய் விருந்து திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடையில் நடந்தது. இதில் தோசை, இனிப்பு வகைகள், சிக்கன் 65, பரோட்டா, சிக்கன் பிரியாணி மற்றும் நெய் சாதம் என 10 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. இரவு 8 முதல் 11 மணி வரை விருந்து நடந்தது. முதல் கட்ட விருந்தில் 700 பேர் சாப்பிட்டனர். இரண்டாம் கட்ட விருந்தில் 300 பேர் சாப்பிட்டனர்.இங்கு சாப்பிட வருபவர்கள் சாப்பிட்டு முடித்த பின் இலைக்கு அடியில் தங்களால் முடிந்த உதவித்தொகையை வைத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவை உண்டபின் நிவாரண உதவித் தொகையை இலைக்கு அடியில் 50 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மொய் வைத்தனர்.

உண்டியலில் உதவித்தொகையளித்த குழந்தை

கடை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலிலும் செலுத்தினர்.இதில் ஒரு சிறுவர் உண்டியலில் சிறுகச் சிறுக சேர்த்து வைத்த சில்லறை காசுகளை நிவாரண நிதிக்காக உண்டியலில் செலுத்தினார். இவ்வாறு வசூலான பணம் மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்தை வயநாடு நிவாரணத்திற்காக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மொய் விருந்தில் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது உதவும் மனப்பான்மையை வெளிப்படுத்தினர்.

மொய்விருந்தில் பங்கேற்றவர்கள்

இதுகுறித்து முஜிப் பிரியாணி கடை உரிமையாளர் முஜிபுர் ரகுமானிடம் பேசினோம். “ஆதரவற்ற 50 பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறேன். கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து உதவினேன். கொரோனா காலத்திலும் களத்தில் இறங்கி உதவிகளைச் செய்தேன். அந்த வகையில் தான் வயநாடு நிலச்சரிவு என்னை மிகவும் பாதித்தது. நான் உதவினால் மட்டும் போதாது. என்னைச் சுற்றியிருப்பவர்களையும் உதவச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் மொய் விருந்து நடத்தினேன். என்னுடைய சமூகவலைதள பக்கத்தில், மொய் விருந்து குறித்து அறிவிப்பை வெளியிட்டேன். மூன்று மணி நேரம் நடந்த விருந்தில் ஆயிரம் பேர் சாப்பிட்டனர் என்றார் முஜீப்.

முஜீப் மற்றும் யூடியுபர்

முஜீப் நடத்திய மொய் விருந்தில் சுமார் மூன்று லட்சம் வசூலானது. இதே பன்னிடுவோம் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் இளைஞர் ஒருவர் தான் மக்களிடம் வசூலித்த மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், சிறார்கள் கொடுத்த 3900 ரூபாய் என மொத்தம் மொத்தம் 6 லட்சத்து 83,900 ரூபாயை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் (ஆக-14ல்) வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட கேரள முதலமைச்சர் அவர்கள் திண்டுக்கல் மக்களுக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.