ஓசூர் கோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவத்தினால், ஒட்டுமொத்த தமிழக வழக்கறிஞர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் கொந்தளித்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்..

என்ன நடந்தது கிருஷ்ணகிரியில்? கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்திலேயே, வட்டாட்சியர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.. பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்தப்பகுதி எப்போதுமே பரபரப்பாக காணப்படும். அப்படித்தான் வழக்கம்போல், நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், போலீஸார் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு வழக்குகளுக்காக வந்திருந்தனர்…

அப்போது, நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் கண்ணன் என்கிற வக்கீல் நடந்து வந்து கொண்டிருந்தார்.. அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அரிவாளை எடுத்து, அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.. இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.. வக்கீல் கண்ணனுக்கு கழுத்து, தோள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.. பிறகு, கோர்ட் வளாகத்திலிருந்த போலீசார், ஆபத்தான நிலையில் இருந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு கண்ணன் தற்போது தீவிர சிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறார். கிளார்க்: இதுகுறித்து தகவலறிந்த நகர போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனர்.. அப்போதுதான், வக்கீல் கண்ணனை அரிவாளால் வெட்டியவர், பயிற்சி வக்கீல் ஆனந்த குமார் என்பது தெரியவந்தது. அதாவது, ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரிடம் கிளார்க்காக பணி செய்து வந்தாராம் ஆனந்த் குமார்..

இவரது மனைவி சத்யாவும் வழக்கறிஞராக பணி செய்து வருகிறாராம். கண்ணனுக்கும், சத்யாவுக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.. தொடர்ந்து கண்ணன் தகராறு செய்து வந்ததால், ஆத்திரமடைந்த ஆனந்த் குமார், இந்த கொலை முயற்சி சம்பவத்தில் இறங்கியதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆர்ப்பாட்டம்: ஆனால், இந்த சம்பவத்தை கண்டித்து கோர்ட் வளாகமே கொந்தளித்துவிட்டது.. ஓசூர் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்திலும் இறங்கினார்கள்.. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், வழக்கறிஞர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்றெல்லாம் கோஷங்களை வக்கீல்கள் எழுப்பினார்கள். இதையடுத்து, ஓசூர் கோர்ட்டு நீதிபதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, வழக்கறிஞர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

இதனிடையே, ஆனந்த் குமார் ஜே எம் 2-ல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.. இதையடுத்து, இந்த கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி சத்யாவும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.. தற்போது தம்பதி இருவருமே ஜெயிலில் உள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக வழக்கறிஞர் சத்யா என்ற சத்யாவதிக்கு, வக்கீல் கண்ணன் போன் மூலம் தொல்லை தந்தாராம்.. அடிக்கடி செல்போனில் மெசேஜ்களை அனுப்பி தொல்லை கொடுத்ததாக கண்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இது சம்பந்தமான விவகாரத்திலேயே தம்பதி இருவருக்கும் கண்ணன் மீது ஆத்திரம் ஏற்பட்டு, அவர் மீதான தாக்குதலை அரங்கேற்றியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த தொடர் விசாரணை நடந்து வருவதால், ஓசூர் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.