உலக அளவில் அதிவேகமாக தொழில் வளர்ச்சி கண்டு வரும் முதல் பத்து நகரங்களில் திருப்பூர் நகரமும் இடம் பெற்றுள்ளது. படித்தவர், படிக்காதவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் உழைப்பின் வழியாகப் படியளக்கும் உன்னத ஊர் திருப்பூர். திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, காங்கேயம், பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், மடத்துக்குளம் என மொத்தம் எட்டு தாலுாகாக்களை உள்ளடக்கியுள்ளது. மாவட்டத்தில் தொழில்வளம் மிகுந்த இந்த சிறப்பான மாவட்டத்திற்கு புதிய ஆக்டிவ் ஆட்சியராக த.கிருஸ்துராஜ் இஆப பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்ற நாள் முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து பணிகளுமே சுறுசுறுப்பாகியுள்ளது!

முதலில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தை கூட்டி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள பணிகள் விரைவாக செயல்படுத்த அறிவுறுத்தினார். அதோடு, மாவட்டத்தில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து கவனமாக கேட்டறிந்ததோடு, அவைகளைச் செயல்படுத்த உத்தரவிட்டார்.

மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் திடீர் விசிட் செய்து, மருத்துவர்கள், செவிலியர்கள் நோயளிகளிடம் கனிவோடு நடந்து கொள்கிறார்களா, குறித்த நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறதா, குறித்த நேரத்தில் மருத்துவர்கள் தங்கள் பணிக்கு வருகிறார்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார் இதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் சுறுசுறுப்படைந்துள்ளது.
ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆய்வு செய்து வளர்ச்சிப் பணிகள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுசெய்து வருகிறார். மேலும், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆய்வு செய்து, பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வருவாய்துறைசார்ந்த ஆன்லைன் சான்றுகள் உடனடியாக வழங்கப்படுகிறதா என்றும், தனிப்பதிவேடுகளை பார்வையிட்டும், காலதாமதமான கோப்புகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிந்து “டோஸ்” விடுவதால் அனைத்து துறையினரும் கலகலத்துப் போயுள்ளனர்.

மனுநீதி நாளன்று வரப்பெற்ற புகார்களின் மீதும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீதும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளதால், வருவாய் துறையினரும், மற்ற துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், மனுநீதி நாள் நடக்கும் தரைத்தள கூட்டரங்கில் நடைபெற்று வந்தது. விவசாயிகளின் கடந்த இரண்டு வருட கோரிக்கையை ஏற்று, இரண்டாவது தளத்திலுள்ள கூட்டரங்கு அறை எண் 240-ல் இனிவரும் காலங்களில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட அளவில் இருப்பிடத்திலிருந்து தொலைவான தூரத்தில் வருவாய்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் கருணையோடு இடமாற்றம் கிடைக்க வழிவகை செய்து வருகிறார்.

மாநகராட்சி, மாநகராட்சியை சுற்்றியுள்ள எட்டு கிமீ சுற்றளவிற்கு இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்கவும், பட்டா இல்லாத இடத்தில் குடியிருப்போர்களுக்கு பட்டா வழங்கிடவும், குடிசைமாற்று வாரியம் வாயிலாகக் கிடைக்கும் வீடுகளுக்கு மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள், விதவைகள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் இஆப, இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக சரியான முறையில் திட்டமிட்டு ஒருங்கிணைத்து வருகிறார். முதல் கட்டமாக கடந்த ஜுலை 20ம் தேதி முதல் விண்ணப்பம் விந்ியோகம் செய்யப்பட்டது. சிறப்பு முகாம்களில் ஈடுபடும் ஊழியர்கள் என்னென்ன செய்யவேண்டும், எவ்வாறு பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டும், பொதுமக்களை அலைகழித்தல் கூடாது, பயனாளிகளிடம் அன்போடு நடந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி, இத்திட்டத்ததை சிறப்பாக நடைமுறைப்படுத்தியுள்ளார்.இதன் பயனாக கடந்த செப் 15-ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் தகுதி பெற்ற மகளிர்களுக்கு 1000-/ ரூபாய் பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அனைவரிடத்திலும் எளிமையாகப் பழகும் குணம், பொதுமக்களின் குறைகளைக் பொறுமையோடு கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் மனம் என திருப்பூர் மாவட்ட மக்களின் நன் மதிப்பைப் பெற்று வருகிறார் ஆட்சியர் கிறிஸ்துராஜ் இஆப.

மாணவனுக்கு அன்புக்கட்டளை

10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனை ஆட்சியர் கிருஸ்துராஸ் இஆப சந்தித்து நலம் விசாரித்தார். 10ம் வகுப்பில் பெயில் ஆன பிறகு மீண்டும் தேர்வு எழுதி படித்து நான் கலெக்டராகி விட்டேன். உன்னால் முடியாதா என்று கேட்டு மாணவனை ஊக்கப்படுத்தினார். பிளஸ் 2 பொதுத் தேர்வில் நீ நல்ல மதிப்பெண் எடு. நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு செல்போனில் அழைத்து கண்டிப்பாக நீ கூற வேண்டும்” என அன்புக்கட்டளை இட்டார்.