மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தேர்தலின்போது தான் அளிக்க வாக்குறுதிகளை தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறார். தொகுதி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு வகையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வரிசையில், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட ஜல்லிபட்டியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான  ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் தற்போது கட்டப்பட்டு வருகின்றது.

சி.மகேந்திரன் எம்எல்ஏ மருத்துவமனையை ஆய்வு செய்தார்

ஜல்லிபட்டியில், 1955-ல், அரசு மருத்துவமனை துவக்கப்பட்டது. படிப்படியாக மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட்டாலும், போதிய வசதிகள் இல்லாமல், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற முடியாமல் இருந்து வந்தனர். குறிப்பாக போதிய படுக்கை வசதி இல்லாமல், அருகிலுள்ள மலைவாழ் கிராம மக்களும் பாதிக்கப்பட்டனர். எனவே அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

சி.மகேந்திரன் எம்எல்ஏ மருத்துவமனையை ஆய்வு செய்தார்

இந்நிலையில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், தொகுதிக்கு, 10 கோரிக்கை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களிடம் தொகுதிக்கான கோரிக்கைகள் பெறப்பட்டது. இத்திட்டத்தில், மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் சார்பில், மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம், ஜல்லிபட்டி அரசு மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்ட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்தார். இதன் அடிப்படையில், தமிழக அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. 9,634 சதுர அடி பரப்பளவில், அவசர சிகிச்சை பிரிவு, 32 படுக்கை வசதி, இ.சி.ஜி., எக்ஸ்ரே அறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று (செப்-01) மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை (கட்டடம்) பிரிவு அலுவலர்களும் ஆய்வு செய்தனர்.

தங்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியதற்கு, ஜல்லிபட்டி சுற்றுப்பகுதி மக்கள் மகேந்திரன் எம்.எல்.ஏ.,வுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.