சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய மகாவிஷ்ணுவை, சென்னை விமான நிலையத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே மகாவிஷ்ணு விவகாரம் பெரிதாக்கப்படுவதாக, இந்து அமைப்பினர் விமர்சித்துள்ளனர். ‘சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அரசு இதுபோன்று கெடுபிடி காட்டுவதில்லை’ என்பது அவர்களது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பள்ளிக்கல்வித்துறை என்ன சொல்கிறது? பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன?
சென்னை அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவதற்காக ‘பரம்பொருள்’ அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அழைக்கப்பட்டார். அவர் தனது பேச்சில், பாவ புண்ணியம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆண்கள் மாதிரி பள்ளியில் பேச அழைக்கப்பட்டார். அங்கு மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளியும் தமிழாசிரியருமான சங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். அவருடன் மேடையிலேயே மகாவிஷ்ணு வாக்குவாதம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாயின.சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மகாவிஷ்ணுவின் பேச்சைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, சைதாப்பேட்டை காவல்நிலையம் மற்றும் அசோக் நகர் காவல்நிலையத்தில் அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் வில்சன் அளித்த புகார் மனுவில், ‘மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டம் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்பிரிவு 72(அ) படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, திருப்பூர் குளத்துப்பாளையத்தில் செயல்படும் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை, செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் வில்சன் அளித்த புகார் மனு இதுபோன்ற நபர்களுக்கு வரவேற்பு கிடைப்பது ஏன்? “ஆன்மிகத்துக்கு தேவையான முதிர்ச்சி மகாவிஷ்ணுவிடம் இருப்பது போல தெரியவில்லை. இந்து ஆன்மிகம் என்பது அனைத்தையும் துறப்பது தான். பரம்பொருள் என்று சொல்லும் நிலைக்கு அவர் மாறவில்லை. ஓஷோவிடம் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதற்கு ஒரு பதில் இருக்கும். இவர்களைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்டால் கோபப்படுவார்கள்” என்கிறார், எழுத்தாளர் இரா.முருகவேள். “மகாவிஷ்ணு சிறைக்கு சென்று வந்தாலும் அவரை ஆதரிப்பதற்கு ஒரு கூட்டம் தயாராக இருக்கும். மறுபிறவி, பூர்வ ஜென்மம் ஆகிய விஷயங்களில் நம்பிக்கை உள்ள கூட்டம் அவரை ஆதரிக்கவே செய்யும். “தன் மீது மக்களுக்கு பயபக்தி, மரியாதை இருக்க வேண்டும் என மகாவிஷ்ணுவை போன்றவர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். அது கேள்விக்குள்ளாகும் போது கோபப்படுகின்றனர். மாற்றுத்திறனாளி ஆசிரியரை பேசவிடாமல் செய்ய வேண்டும் என்பது தான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது. மாற்றுத்திறனாளி ஆசிரியரை பேச விடாமல் செய்ய வேண்டும் என்பது தான் மகாவிஷ்ணுவின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் எழுத்தாளர் இரா.முருகவேள்.
இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு
ஆனால், பள்ளிக்கல்வித் துறையில் நடக்கும் தவறான விஷயங்களை திசைதிருப்பவே மகாவிஷ்ணு விவகாரம் பெரிதுபடுத்தப்படுவதாக கூறுகிறார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் வழக்கறிஞர் ராமமூர்த்தி.”கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி பயிற்சிகளை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. மற்ற பள்ளிகளிலும் இதுபோல போலி முகாம்கள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதுபோன்று பள்ளிக்கல்வித்துறை மீது எழுந்த விமர்சனங்களை மறைப்பதற்காக நடத்தப்படும் யுக்தியாகவே இதைப் பார்க்கிறோம்”. என்கிறார் ராமமூர்த்தி.தொடர்ந்து பேசிய அவர், “மகாவிஷ்ணு விவகாரத்தை வைத்துக் கொண்டு பள்ளிகளில் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்பதில் வழிகாட்டுதல்களை கொண்டு வருவதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு முன்பு இவ்வாறு மகாவிஷ்ணு பேசியதாக எந்த தகவலும் இல்லை. சொல்லிக் கொடுக்கப்பட்டு பேசப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். இதை நாடகமாகவே பார்க்கிறோம்” என்றார். “மதத்தையும் அரசையும் தள்ளி வைப்பது என்பது வேறு. இவர்கள் இந்து மதத்தை மட்டும் தள்ளி வைக்கின்றனர். கிறிஸ்துவ, இஸ்லாமிய பள்ளிகளில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்” என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.மகாவிஷ்ணுவிடம் கேள்வியெழுப்பிய தமிழ் ஆசிரியர் சங்கருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிபள்ளிக்கல்வித் துறை விளக்கம் வழக்கறிஞர் ராமமூர்த்தியின் குற்றச்சாட்டை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் மறுத்துள்ளார். “இந்தப் பிரச்னையில் தலைமை ஆசிரியையின் பங்களிப்பு எதுவும் இல்லை. பள்ளி மேலாண்மைக் கமிட்டியை சேர்ந்த பெண்மணி ஒருவர் தான் மகாவிஷ்ணுவை கூட்டி வந்திருக்கிறார். இவ்வாறு பேசுவார் எனத் தெரிந்திருந்தால் அவரை அனுமதித்திருக்க மாட்டார்கள். அதேநேரம், சைதாப்பேட்டை பள்ளிக்கு, அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியையை தான் கூட்டிச் சென்றுள்ளார். அங்கு தான் பிரச்னை ஏற்பட்டது” என்றார். தொடர்ந்து பேசிய அவர்,”மெட்ராஸ் கல்வி சட்டத்தில், மதம் சார்பான எந்த நிகழ்வுகளையும் பள்ளி வகுப்பு நேரங்களில் நடத்தக் கூடாது என உள்ளது. இது அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அவர்களுக்கான சலுகைகள் உள்ளன. ஆனால், வகுப்பறைகளில் நடத்தப்பட வேண்டியதை மட்டுமே அவர்கள் செயல்படுத்த வேண்டும்” என்கிறார் கண்ணப்பன்.
மகாவிஷ்ணுவுக்கு எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்?
மகாவிஷ்ணு மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், “மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தினால் மட்டுமே வெறுப்பு பேச்சு என்ற பிரிவில் வழக்கு பதிவாகும். இன்னொரு மதத்தை பாதிக்கும் வகையில் மகாவிஷ்ணு எதையும் பேசவில்லை. பார்வை மாற்றுத் திறனாளியிடம், ‘முன் ஜென்ம பாவம்’ எனக் கூறியது அவர்களை அவமதிக்கும் செயல். அதற்காக அவதூறு வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும்” என்கிறார். “அவதூறு என்பது தனி மனிதர்களை இலக்காக வைத்து பேசினால் வரும். அவர், பார்வை மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் குறிப்பிடுகிறார். பகுத்தறிவுவாதம் பேசும் பிரிவினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவதூறு வழக்கைப் பதிவு செய்யலாம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்” என்கிறார் ராதாகிருஷ்ணன்.
‘மாணவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும்’
“தன்னால் அனைத்தையும் சாதிக்க முடியும்; மற்றவர்களுக்கு இல்லாத சக்தி தன்னிடம் இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். அதுதான் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு காரணம்” என்கிறார் மூத்த மனநல மருத்துவர் சிவநம்பி. “பள்ளி மாணவர்களிடம் இவ்வாறு பேசும் போது அவர்களுக்கு மனவருத்தமும் மனச் சோர்வும் ஏற்படும். பிற்காலத்தில் இது பாதிப்புகளை ஏற்படுத்தும். பொது இடத்தில் இதுபோன்று பேசும்போது பிரச்னை இல்லை. அதைக் கேட்பவர்கள் கேட்கட்டும். மற்றவர்கள் புறக்கணித்துவிட்டு செல்வார்கள். பள்ளிகளில் இவ்வாறு பேசுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்” என்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கு முற்போக்கான அறிவியல்பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெறும் வகையில் புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிடுவதற்கு தான் ஆணையிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.அதற்கேற்ப, வெள்ளிக்கிழமையன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் கண்ணப்பன் தெரிவித்தார். “கூட்டத்தில், எந்த சூழலிலும் தனியார் நிகழ்வுகளை பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது; பாடம் தொடர்பானவற்றை மட்டும் பேச அனுமதிக்கலாம்; ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்டு தன்னம்பிக்கை வகுப்புகளை எடுக்கலாம். பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன” என்கிறார் கண்ணப்பன்.அனைத்துப் பள்ளிகளும் வரும் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வகுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கமிட்டி ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் கண்ணப்பன் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தகவல்
இந்நிலையில், ‘மகாவிஷ்ணுவை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கிறிஸ்துவர்’ என்ற தகவல் இணையத்தில் பரவியது. “இது முற்றிலும் தவறான தகவல். சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் ‘அந்தோணி பர்ணாந்து’ என்ற முகநூல் பக்கம், ஆசிரியர் சங்கருடையது அல்ல” என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு தெரிவித்துள்ளது