மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 7ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து போலீசார் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 3ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். பின்னணி: சென்னை அசோக் நகரில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் ஆக.28ம் தேதி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தன்னம்பிக்கை பேச்சாளர் என சொல்லிக்கொள்ளும் மகாவிஷ்ணு எனும் நபர் சிறப்புரை ஆற்றியிருந்தார். அவர் பேசிய விஷயங்கள் குறித்த வீடியோ நேற்று சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பினர். அவர் சனாதனத்தை பேசுகிறார் என்று புகார்கள் எழுந்தன. மகாவிஷ்ணு என்ன பேசினார்?: “ஏழைகள், மாற்றுத்திறனாளிகளை முன் ஜென்ம பாவத்தின் பலன்” என முன்ஜென்மம், மறு ஜென்மம், பாவம், புண்ணியம் குறித்து பேசியிருக்கிறார். இவரது கருத்து அவர் அறிவியலுக்கும், கல்விக்கும் புறம்பாகவும், மாணவர்களின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் வகையிலும், மாணவிகளிடையே மத பிரிவினையையும், மூட நம்பிக்கையையும் தூண்டும் விதமாக இருந்தது என்பதுதான் குற்றச்சாட்டு.
திமிர் பேச்சு: மட்டுமல்லாது அவர் பேசிய கருத்துக்கள் தவறு என்று, பார்வை மாற்றுத்திறனாளி ஆசியர் சங்கர் என்பவர் கேள்வி எழுப்பினார். இதை கேட்டுக்கொள்ளாத மகாவிஷ்ணு, அந்த ஆசிரியரை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். “உங்கள் பெயர் என்ன? இவ்வளவு காலம் ஆசிரியர்களால் போதிக்க முடியாத கல்வியை ஆன்மீகம் என்ற பெயரில் நான் போதித்து வருகிறேன். இதற்கு ஆசிரியர்கள் எனக்கு நன்றி கூற வேண்டும்” என்று கூறினார். உடனே குறுக்கிட்ட ஆசிரியர் சங்கர், அரசு பள்ளிகளில் ஆன்மிகம் பேசக்கூடாது என்று தெளிவுபடுத்தினார். இதையும் ஏற்றுக்கொள்ளாத மகாவிஷ்ணு, “அரசு பள்ளிகளில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா? உங்கள் முதன்மை கல்வி அலுவலரை விட நீங்கள் அறிவு பெற்றவரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், மாற்றுத்திறனாளி சங்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார்