மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்-12) காலையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக ஆர்வலர் தாண்டிக்குடி கணேஷ்பாபு சட்டை அணியாமல் துண்டு மற்றும் செம்புடன் நூதன முறையில் வந்து 7 கோரிக்கை மனுக்களை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார்.
இவர் மனுவில், வாடிப்பட்டி வட்டம் முள்ளிப்பள்ளம் கிராம பொதுமக்கள் யாராவது இறந்து விட்டால் அவர்களுக்கு நீர்மாலை எடுத்து குளிப்பதற்கு ஏற்கனவே இருந்த குளியல் தண்ணீர் தொட்டி இருந்த இடத்தின் அருகில் புதிய தொட்டி கட்டுவதாக கூறி வேலையும் ஆரம்பித்துவிட்டு தற்போது அங்கு தொட்டி கட்டாததால் யார் இறந்தாலும் நீர்மாலை எடுத்து குளிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் அவல நிலையை காட்டத்தான் இன்று நான் சட்டை இல்லாமல் துண்டுடன் செம்பு ஏந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.
திருமோகூர் முதல் அம்மாபட்டி காளிகாப்பான் கருப்பாயூரணி வழியாக வண்டியூர் வரை உள்ள நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் அகற்றிவிட்டு அந்த சாலையை அகலப்படுத்திடவும் அதன் மூலம் அதிகம் நடக்கும் விபத்துக்களை தடுத்திட வேண்டும். மேலும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளை கண்காணித்து அப்புறப்படுத்த வேண்டும். ஆரப்பாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் இலவச பொது கழிப்பறையை திறந்திடவும் நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் அகற்றிட வேண்டும்.
பரவை பேரூராட்சி பகுதியில் ஆகாஸ் கிளப் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி விஸ்தரிப்பு பகுதிகளில் உடனே அடிப்படை வசதிகள் செய்துதரவும். மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் நான் ஏற்கனவே கொடுத்த புகார் மனுக்கள் மீது விரைந்து விசாரணை செய்ய வேண்டும். கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு வாலகுருநாத அங்காள ஈஸ்வரி முண்ட கருப்பு சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமாக நிலங்கள் ஏதும் ஆக்கிரமிப்பில் இருந்தால் அதை அரசு மீட்டு கோவிலுக்கே திரும்பவும் வழங்கிட வேண்டும் என புகார் மனு அளித்தார்.