கலையாத தலை, சிரித்த முகத்தோடு பச்சைக் கலர் குவாலிஸ் காரில் ஒன்றிய செயலாளராக இருக்கும்போது இல.பத்மநாபன் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் இன்று மாவட்ட செயலாளராக ஆன பின்பும் இருக்கிறார். பொறுப்புகளில் தான் மாற்றமே தவிர அவரின் குணத்தில் எப்போதும் மாற்றம் இருந்ததில்லை என்கின்றனர் திமுகவினர்.
“நாற்பதும் நமதே” என்ற முழக்கத்துடன் மக்களவை தேர்தலில் களமிறங்கிய திமுக, அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்குப்பகுதிகளை முழுமையாக கைப்பற்றியுள்ளது. காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்குள் வருகிறது. காங்கேயம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு மக்களவை தொகுதிக்கும், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிகள் பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கும் வருகிறது.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் மேற்படி 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் இணைந்து கடுமையாக தேர்தல் பணியாற்றினார். தேர்தல் சமயத்தில் தொகுதிகளில் கட்சிக்குள் நிலவி வந்த கோஷ்டி பூசல், நிர்வாகிகளிடையே மனக்கசப்பு போன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
இல.பத்மநாபன் தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறார். தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் போன்றவைகளை அடிக்கடி நடத்தி திமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி வருகிறார். இதனால் பொதுமக்களிடம் திட்டங்கள் சென்றடைகிறது. அதோடு புதிய வாக்காளர்களின் பார்வையும் திமுகவின் பக்கம் திரும்பியுள்ளது.
தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் மக்கள் நலத்திட்டங்களை துவக்கிவைப்பது மட்டுமின்றி, பணிகள் நடைபெறும் போதே ஆய்வு செய்வதும் வருகிறார். மேலும், மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இல.பத்மநாபனின் முரட்டு பக்தனும், மூலனூர் பேரூராட்சித் தலைவருமான மக்கள் க.தண்டபாணியை சந்தித்தோம்.. இல.பத்மநாபன் திமுகவில் அடிமட்டத் தொண்டராக இருந்து, கிளைச் செயலாளர், தூரம்பாடி ஊராட்சித் தலைவர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர், மாவட்ட செயலாளர், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் 4ம் மண்டல தலைவர் என படிப்படியாக உயர்ந்துள்ளார். திருப்பூர் மாநகராட்சி மேயராக இல.பத்மநாபனைத்தான் கட்சி அறிவிக்க இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மாறிவிட்டது. அப்போது கூட எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இயல்பாகவே இருந்தார் எங்கள் மாவட்ட செயலாளர். இல.பத்மநாபன் தலைமைக்கு மிகுந்த விசுவாசமாக இருப்பவர்.
இந்த பகுதியில் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலருமான இல.பத்மநாபனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. துவக்கத்தில் அதிமுக கோலோச்சிய காலங்களில் இந்த பகுதிகளில் பெருமளவு இளைஞர்களை திமுகவில் இணைய வைத்ததிலும், திமுகவின் வாக்குவங்கியை உயர்த்தியதிலும் பெரும்பங்கு வகித்தவர். பொதுமக்கள் மற்றும் கட்சிக்கரார்களின் இன்பத்திலும், துன்பத்திலும் தவறாது பங்கெடுப்பார். மக்கள் நலத்திட்டங்களைக் கோரி வருபவர்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும்.
இல.பத்மநாபனின் அரசியல் பயிற்சிப் பட்டறையில் பயின்ற பலரும் இன்று திமுகவில் பரவலாக பல பொறுப்புகளில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள் என்றால் அது மிகையல்ல என்றார்!
இதையடுத்து, இல.பத்மநாபனை சந்தித்தோம்.. எங்கள் பகுதிகளில் வாழும் பொதுமக்களை பொறுத்தவரை அவர்கள் வேறு.. நான் வேறு அல்ல.. நாங்கள் ஒரு குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மக்களுடன் 20 வருடங்களுக்கு மேலாக நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றேன். எந்த கோரிக்கை என்றாலும் என்னிடம் உரிமையோடு கேட்பார்கள் அதை நான் உடனடியாக நிறைவேற்றித் தந்து வருகின்றேன்.
மாநகராட்சி நகர்மன்ற உறுப்பினர் என்ற முறையில் உட்கட்டமைப்பு வசதிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றேன். வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முறையாக தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு, தார்ச்சாலைகள், கான்கிரீட், பேவர்பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, உயர் மட்டப் பாலங்கள் மற்றும் மின்மாயனம் கட்டப்பட்டுள்ளது. பல தார்ச்சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற இடங்களில் கம்பிவேலிகள் அமைக்கப்படுகிறது.
அமைச்சர் சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் எங்கள் பகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கின்றனர். அதேபோல கட்சிப்பணிகளுக்கு ஊக்கம் அளிக்கின்றனர். அவர்களின் உந்துதல்களே எங்களை அயராது உழைக்கச் செய்கின்றன. சுணக்கமின்றி சுழன்று வருகின்றோம்.
அதிமுகவின் மீது வாக்காளர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். விளக்கொளியின் ஈசல்கள் தான் பாஜக. சிறிது நேரம் பறக்கும் பின்னர் மடிந்து விடும். முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் பாசிசத்திற்கு எதிரான தெற்கின் குரல்களாக இருந்து வருகின்றார்கள். மகளிர் ஊக்கத்தொகை, இலவச பேருந்து வசதி, மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் என முதல்வர் ஸ்டாலினின் சாதனைகள் தொடர்கிறது. எங்கள் திமு கழகத்தின் வெற்றியும் தொடரும் என்றார் பூரித்த முகத்துடன்!
இதையடுத்து திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சில திமுக நிர்வாகிகளைச் சந்தித்தோம்…
பேச்சில் தெளிவும், பணியில் துணிவும் கொண்ட உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தியைச் சந்தித்தோம்; எங்கள் ஒன்றியப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இல.பத்மநாபன் ஆகியோர் செய்து தந்துள்ளார்கள். குறிப்பிடும்படியாக சின்னவீரம்பட்டி ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டுமானத்திற்கு நமக்குநாமே திட்டத்தின் கீழ் 1.50 கோடி ரூபாயும், இந்திரா நகர் பகுதியில் உள்ள பொதுக்கிணறுக்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு 5 லட்சம் ரூபாயும், உடுமலை-தாராபுரம் சாலையிலுள்ள ஆர்கேஆர் பள்ளிக்கு அருகிலிருந்து உடுமலை-பல்லடம் சாலை வரை கிராம இணைப்புச்சாலை திட்டத்தின் கீழ் 92 இலட்சம் ரூபாயும் கிடைக்க வழிவகை செய்தார்கள்.
மேலும், குறுஞ்சேரி ஊராட்சியில் குறுஞ்சேரி முதல் சின்னவீரம்பட்டி திருப்பூர் சாலை வரை 82 இலட்சம் ரூபாய் மதிப்பில் இணைப்பு சாலை திட்டம், பொதுப்பணிகளுக்காக அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குறுஞ்சேரி ஊராட்சிக்கு 33 இலட்சமும், சின்னவீரம்பட்டி ஊராட்சிக்கு 44 இலட்சமும் பெற்றுத்தர காரணகர்த்தாவாக இருந்தார்கள். மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் கட்சிப்பணிகளில் மிகவும் சுறுசுறுப்பானவர். ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகளுடன் நட்புறவோடு இணைந்து பணியாற்றுவார். நல்ல நிர்வாகி, நல்ல மனிதர். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இல.பத்மநாபன் ஆகியோரின் தலைமையில் கீழ் நாங்கள் சிறப்பாக பணியாற்றுகின்றோம் என்றார்.
சுறுசுறுப்புடன் கட்சிப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞரும், காங்கேயம் சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான கே.கே.சிவானந்தனை சந்தித்து கேட்டபோது; திருப்பூர் மாவட்டத்தின் முக்கியமான தொகுதியாக காங்கேயம் சட்டமன்ற தொகுதி உள்ளது. காரணம் எங்கள் மாவட்ட “ஆற்றல் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்த தொகுதி இது.
பல சத்தான திட்டங்களை காங்கேயம் தொகுதிக்கு பெற்றுத்தந்துள்ளார். குறிப்பாக எங்கள் ஒன்றியத்திற்குட்பட்ட சிவன்மலை மலைப்பாதை சீரமைப்பு பணிகளுக்கு 3 கோடி ரூபாயும், காங்கேயம் பஸ் நிலையம் -சிவன்மலை தார்ச்சாலை மேம்பாட்டிற்கு 5 கோடி ரூபாயும், படியூர்-ஊத்துக்குளி சாலை அகலப்படுத்தும் பணிக்கு 6 கோடி ரூபாயும் பெற்றுத்தந்துள்ளார்.
காங்கேயம் மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியுள்ளார். அதோடு, படியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிவன்மலையில் 3.2 கோடி மதிப்பில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிறு விளையாட்டு அரங்கம் தமிழ் நாட்டிலேயே மொத்தமாக பத்து தொகுதிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது என பணிகளை அடுக்கினார்.
எங்கள் மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் கடைநிலை கட்சிப் பொறுப்பிலிருந்து வந்தவர் என்பதால் நிர்வாகிகள், தொண்டர்களின் கஷ்ட, நஷ்டங்களை நன்கறிந்தவர். தட்டிக்கொடுத்து கட்சி வேலைகளில் ஈடுபடச் செய்வார். அன்பு என்னும் மந்திரக்கோல் கொண்டு தொண்டர்களை அரவணைத்து, நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கழக வெற்றிக்காக கடுமையான உழைப்பைத் தந்து வருகிறார். தலைமைக்கும் எங்களுக்கும் உறவுப் பாலமாகத் திகழ்கிறார். அவரின் தலைமையின் கீழ் பணியாற்றுவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வை ஏற்படுத்தித்தரும் மும்முரமான பணியில் ஈடுபட்டிருந்தார் வெள்ளகோவில் திமுக நகர செயலாளர் சபரி முருகானந்தன். அவரை சந்தித்து கேட்டோம்; 1996 இல் இது வெள்ளகோவில் தொகுதியாக இருந்தபோது, எங்கள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தான் சட்டமன்ற உறுப்பினர். தொகுதியில் குடிநீர் பஞ்சத்திற்கு தீர்வு காணும் வகையில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்து சீரான குடிநீர் விநியோகத்திற்கு வழிவகுத்தார்.
மக்கள் தொகை பெருக்கத்தால் குடிநீர் பிரச்சனை மீண்டும் தலை தூக்கியது. இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி செய்த அதிமுக அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. அதன் பின்னர் தற்போது குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் 36 கோடி மதிப்பில் குடிநீர் விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் எங்கள் பகுதியில் குடிநீர் குறைபாடுக்கு திமுக ஆட்சியில் முடிவுரை எழுதப்பட்டுள்ளது.
மயிலரங்கத்தில் இருந்து அமராவதி ஆற்றைக் கடந்து தங்கள் கிராமங்களுக்கு செல்ல அப்பகுதிமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மழை, வெள்ள காலங்களில் பரிசல் இயக்க முடியாது. இதற்கு தீர்வு காணும் வகையில் 2006 இல் உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் ஊர்களுக்கு சுலபமாக சென்று வருகின்றனர்.
கடந்த வருடம், காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் கலைஞர் மக்கள் சேவை முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 30 ஊராட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இருபது ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாத சில பிரச்னைகளுக்கு கூட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தீர்வு ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த முகாம் நடைபெற்றதால் எங்கள் தொகுதி பொதுமக்கள் பெரிதும் பயனடைந்தனர்.
தொகுதி வளர்ச்சிக்கு அமைச்சர், கட்சி வளர்ச்சிக்கு எங்கள் மாவட்டம் இல.பத்மநாபன்தான். கட்சிக்காரர்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பிரச்னைகளையும், தேவைகளையும் கூறலாம். கை மேல் பலன் கிடைக்கும். கட்சி வளர்ச்சிக்கு அடிநாதமாக திகழ்கிறார். எங்கள் நகர பகுதிகளில் திமுகவில் இணையும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறார்கள். புதிதாக இணையும் தொண்டர்களிடமும் இன்முகத்தோடு பேசுவார்.
மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் எங்களுடன் நெருக்கமாக இருக்கிறார். தொண்டர், நிர்வாகி என்ற பகுபாடுகள் அவரிடம் அறவே இல்லை. கழக முன்னோடிகளுக்கு மிகுந்த மரியாதை அளிப்பார். அவர் ஒரு தெளிந்த நீரோடை எல்லோர் பார்வைக்கும் ஒரே மாதிரியகத்தான் இருப்பார் என்றார்.
அரசியல் அறிவாற்றல் வாய்ந்தவரும், உடுமலை நகர்மன்ற தலைவருமான மு.மத்தீனை சந்தித்தோம். 2024 பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்ற இமாலய வெற்றியை வாக்காளர்கள் திமுகவிற்கு கொடுத்துள்ளார். இதற்கொல்லாம் காரணம் முதல்வர் ஸ்டாலினின் முத்தான திட்டங்களும், அமைச்சர் உதயநிதியின் சத்தான சுற்றுப்பணமும் தான். அதேபோல பொள்ளாச்சி தொகுதியில் திமுக தன் வரலாற்று வெற்றியை பதிவு செய்ததில் தொகுதி மக்களின் நம்பிக்கையாக விளங்கும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி, தொகுதி பொறுப்பாளர் பூச்சி முருகன், மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர்கள் அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து விருப்பு வெறுப்பின்றி செயல்பட்டனர். வெற்றிக்கனியைப் பறித்தோம்..
இதே போன்ற மகத்தான வெற்றி சட்டமன்ற தேர்தலிலும் இருக்க வேண்டும். உடுமலைப்பேட்டை தொகுதியில் இம்முறை வாய்ப்பு கேட்டு 50க்கும் மேற்பட்டவர் சீட்டு கேட்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே போட்டி அரசியல், கோஷ்டி அரசியல், பகை அரசியல் ஆகியவற்றால் ஒருவருக்கு கிடைத்து மற்றவருக்கு கிடைக்காமல் போனால் களப்பணியில் சுணக்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் இதனைத் தவிர்க்கும் வகையில் அனைத்து கழகத்தினர் மத்தியிலும் பொதுவான நபராகவும்,மாவட்ட செயலாளர் என்ற நிலையிலுள்ள இல.பத்மநாபன் இத்தொகுதியில் போட்டியிட விண்ணப்பிப்பார் என கழகத்தினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் அவர் போட்டியிட்டால், கட்சியினர் மாற்றுக்கருத்தின்றி ஒருமித்த உணர்வோடு செயல்படுவார்கள். எளிதாக வெற்றி பெறலாம்.
1996 க்கு பிறகு உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றிபெறவில்லை. இம்முறை கழகம் நிச்சயம் வெல்லும் அதற்கான களப்பணிகளை தலைமையின் ஆணையின்படி செய்து முடிப்போம் என்றார்.