கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியில் கடந்த 26−ந் தேதி மூர்த்தி என்பவர் தலைமையில் 25க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் குழந்தைராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் 4−குடும்பங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, இது தங்களுக்கு சொந்தமான இடம் உடனே காலி செய்ய வேண்டும் என கூறி வீட்டிலிருந்த முதியவர்கள், குழந்தைகள், இளம் பெண்களை தாக்கி, வீட்டையும் சேதப்படுத்தி, பொருட்களை சூறையாடியது தொடர்பாக  குழந்தைராஜ் குடும்பத்தினர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்ததையடுத்து கூலிப்படையினர் 8−பேர்களை கடந்த 26−ந் தேதி போலீசார் கைது செய்தனர்.

ஆனால் கூலிப்படைகளின் தலைவன் ரவுடி மூர்த்தி உள்ளிட்ட இன்னும் சில ரவுடிகளை கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மூஞ்சிக்கல் பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.கொடைக்கானலில் ரவுடிகள், கூலிப்படைகள் வளர்ச்சி அதிகரித்து வருகிறது இவற்றை கட்டுப்படுத்தியும்  ரவுடி கும்பலின் தலைவன் மதுரை பெருங்குடியைச் சேர்ந்த மூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். நிலப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை மூலம் தீர்வு காண வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் நாகை. திருவள்ளுவன் பேசினார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலர் தர்மராஜ் தலைமை வகித்தார், நகர பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், அன்புபுலி முன்னிலை வகித்தனர். மேலும் இக் கட்சியின் பொதுச் செயலாளர் பேரறிவாளன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஆறுமுகம், மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  மதுரை, திண்டுக்கல், தேனி, நிலக் கோட்டை, வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 150−பேர்கள் கலந்து கொண்டனர்.

கொடைக்கானலில் தலைதூக்கும் ரவுடியிசத்திற்கு முட்டுக்கட்டை போடுவாரா திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ?