திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இருபது வருடங்களாக சமூக ஆர்வலர் மற்றும் சன் அரிமா சங்கத்தைச் சேர்ந்த பட்டயத் தலைவர் டி.பி.ரவீந்திரன் கொடைக்கானல் மற்றும் சுற்றுப் பகுதிகளிலும், அரசு அலுவலக வளாகங்களிலும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்தும், ஆனந்தகிரி, அட்டுவம்பட்டி, லாஸ்காட் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் வண்ணத்தில் பூக்கும் மரங்களும், ஐநூறு ஆண்டுகள் வரை உயிர்வாழும் சிறு நாவல் மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அரிய மரக்கன்றுகளை நடவு செய்து சிறப்பாக பராமரித்து வருகிறார்.

மாநில ஆளுநர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் கொடைக்கானலுக்கு வரும் போது அவர்கள் கைகளால் மரக்கன்றுகள் நடவு செய்யவைத்து பாதுகாப்பு கூண்டு அமைத்து மரம் நடுபவர்களின் பெயரை அதில் எழுதி வைத்து பராமரித்து வருவதை ஒரு கடமையாக செய்து வருகிறார் டி.பி.ரவீந்திரன்.

இந் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆனந்தகிரிப் பகுதிகளில் வளர்ந்த மரங்கள் கிளைகள் மின் கம்பங்களில் உரசி சென்றதால் மரக் கிளைகள் அகற்றப்பட்டது. சரி அதுகூட பராவாயில்லை ஆனால் தற்போது கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் சமுதாய சமையல் கூடம் கட்டப்பட்டு வருகிறது. கவனமுடன் கட்டிடப் பணிகளை கையாளவில்லையென்பதால் இப் பகுதியில் வளர்ந்து வரும் அரிய மரக் கன்றுகள் சேதப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டது.

கட்டுமானப்பணி நடைபெறும் இடம்

அதிலும் முந்தைய திண்டுக்கல் ஆட்சியர் வள்ளலார் ஐஏஎஸ் வைத்த மரக்கன்றும் அதனின் கூண்டும் தூக்கியயெறியப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகளின் போது இதுபோல முக்கியஸ்தர்கள் நடவு செய்த மரங்கள் இடையூறு என்றால், அவைகளை முறையாக வேறு ஏதேனும் ஒரு பாதுகாப்பான இடத்தில் மறுநடவு செய்ய வேண்டும். அதைவிடுத்து இப்படி பொறுப்பற்ற தனமாக நடந்துகொள்வது எந்த விதத்தில் நியாயம்? இதுகுறித்து கட்டிடப்பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானலில் கடந்த 2009−ம் ஆண்டு அப்போதிருந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வள்ளலார் பெயரில் அவரே நட்டு வைத்த மரக்கன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் முன்பாகவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு இதுபோல இடையூறாக இருக்கும் மரங்களை மறுநடவு செய்யச்சொல்லி அறிவுறுத்த வேண்டும். கட்டுமான பணிகளுக்கு 30 பர்சன்ட் 35 பர்சன்ட் என கமிஷன் பார்ப்பதிலேயே குறியாக உள்ளபோது இதற்கெல்லாம் எங்கு நேரம் இருக்கப்போகிறது.

2009 இல் மாவட்ட ஆட்சியராக இருந்த வள்ளலார் ஐஏஎஸ் மரக்கன்று நடவு செய்தபோது

இந்த லட்சணத்தில், கொடைக்கானலில் சமீப காலமாக வனத்துறையினர் ஆசியோடு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை அதிகாரிகளின் உதவியோடு பாறைகள் வெடி வைத்து உடைப்பதும், போர்வெல் அமைப்பது, பொக்லைன் இயந்திரம் மூலம் கனிம வளங்கள் கொள்ளையடிப்பது என மலைகளின் இளவரசியை கூறுபோட்டு வருகிறார்கள்.இவற்றையெல்லாம் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா, வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் எதையும் கண்டுகொள்வதில்லை. இதைவிட பல முக்கியமான பணிகள் உள்ளது போல.. பாவம்!

மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஐஏஎஸ்

எனவே மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஐஏஎஸ் கொடைக்கானலில் அகற்றப்பட்ட மரக்கன்றுகளை மறுநடவு செய்யவும், மரக்கடத்தலை தடுக்கவும், போர்வெல், பொக்லின் போன்ற இராட்சத இயந்திரங்கள் இயக்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காடு அழிந்தால் நாடே அழிந்து விடும்!