திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி 24−வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருப்பவர் சந்திரமோகன். இவர் நகர்மன்ற உறுப்பினராகும் முன்பு சாதாரண பழைய ஆம்னி கார் டிரைவராக இருந்தார். உள்ளாட்சி தேர்தலின் போது 24 வது வார்டில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால் செண்பகனூரைச் சேர்ந்த திமுகவினர் தங்களின் சுயலாபத்திற்காக உள்ளடி வேலை செய்து டாக்ஸி டிரைவர் சந்திரமோகனை சுயேட்சையாக 24 வது வார்டில் தென்னைமர சின்னத்தில் போட்டியிடவைத்து வெற்றிபெறச்செய்தனர். திமுகவின் தயவால் வெற்றிபெற்றதால் சந்திரமோகனும் திமுகவில் ஐக்கியமானார்.

கவுன்சிலர் சந்திரமோகன்

பதவி, பணம் வந்தால் பத்தும் செய்யும் என்ற முன்னோர்களின் சொல்லின்படி,   இவர் தனது ஊழல் திருவிளையாடலை நிறைவேற்றி வருகிறார். முதற்கட்டமாக கொடைக்கானல் செண்பகனுர் 24 வது வார்டில் ரூ 35 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவர் அமைப்பதற்கு நகர்மன்றத் தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் மற்றும் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

கவுன்சிலர் சந்திரமோகன் என்ன செய்திருக்க வேண்டும்? செண்பகனுர் பகுதியில் குடியிருப்பு பகுதி அல்லது போக்குவரத்துள்ள முக்கிய சாலைகளில் ஆபத்தான பகுதிகளில் தடுப்புச் சுவர் அல்லது சாலை அமைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் செண்பகனூர் இருதயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் வீடு அருகே ஓர் தடுப்புச் சுவரும், அதே பகுதியில் இருதயபுரம் அட்டக்கடி செல்லும் வழியில் உள்ள தனக்கும் தன்னுடைய உறவினர்களுக்கும் சொந்தமான விவசாய நிலத்தையொட்டி சுமார் 700 அடி நீளத்திற்கு ரூ 35 லட்சம் செலவில் தடுப்புச் சுவர் அமைத்துள்ளார். மக்கள் வரிப்பணம் என்ன சந்திரமோகனின் சொந்தப்பணமா தனது இஷ்டத்திற்கும் தனது இடத்திற்கும் செலவு செய்ய?

விவசாய நிலத்தையொட்டிய தடுப்புச்சுவர்
இருதயபுரம் அட்டக்கடி செல்லும் சாலையில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பொது குடிநீர் குழாய்

இருதயபுரம், செண்பகனுர், வசந்தநகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்காமல் இருப்பதால் மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. அப்பகுதி மக்கள் உங்கள் விவசாயத் தோட்டத்தில் தடுப்புச் சுவர் அமைக்கலாமா  என சந்திரமோகனிடம் கேட்டதற்கு தான் திமுக கவுன்சிலர் எனக்கு மாவட்ட திமுகவிலும், மாநிலத்திலும் செல்வாக்கு உள்ளது. யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் காசு கொடுத்துதான் எனக்கு ஓட்டு போட்டுள்ளீர்கள் நான் என்ன செய்கிறேனோ அதைப் பற்றி யாரும் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது என்னை எதிர்த்தால் நான் மோசமானவனாக மாறிவிடுவேன் எனக்கு பல ரவுடிகளிடத்தில் தொடர்பு உள்ளது என அப்பாவி மக்களை மிரட்டி உதார் விட்டுள்ளார். இதனால் கேள்வி கேட்டவர்களும் வாயடைத்துள்ளனர் என்கின்றனர்.

மேலும், பொது குழாயிலிருந்து திருட்டுத்தனமாக  கொடைக்கானல் நகராட்சி பணியாளர் வாட்டர்மேன் வேலுச்சாமி உதவியுடன் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாயிலிருந்து தன்னுடைய விவசாய நிலத்திற்கு இணைப்பு எடுத்து தன்னுடைய தோட்டத்தில் சின்டெக்ஸ் டேங்க் வைத்து திருட்டு கணெக்சன் கொடுத்துள்ளார் கவுன்சிலர் சந்திரமோகன். இந்த தண்ணீர் திருட்டு நகராட்சி பொறியாளருக்கு தெரியுமா இல்லை தெரிந்தேதான் நடக்கிறதா ?  

தண்ணீர் திருட்டு

செண்பகனுர் வசந்த நகர் பகுதியில் உள்ள அரசு நிலம் பட்டியலின மக்கள் மற்றும் ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை திமுக கவுன்சிலர் சந்திரமோகன் இவரது கூட்டாளிகள் சேர்ந்து பல லட்சம் மதிப்புள்ள இடத்தை மாற்று சமூகத்தினருக்கு விற்றுள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இன்பராஜ் என்பவர் இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி நிலக்கோட்டை தனி தாசில்தாரிடம் மனு கொடுத்து அந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க கொடைக்கானல் இருதயபுரம் பகுதியில் கவுன்சிலர் சந்திரமோகன் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியில்லாமல் காட்டேஜ், லாட்ஜ், ஹோம் ஸ்டே  கட்டுவதற்கு பல லட்சங்களை பெற்றுக்கொண்டு தான் அனுமதி வாங்கித்தருவதாக பாவ்லா காட்டி வருகின்றாராம்? அதோடு, செண்பகனூர் இருதயபுரம் குடியிருப்பு பகுதியில் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதால் பொது மக்கள் நிம்மதியிழந்து வருகின்றனர்.

இருதயபுரம் பகுதியில் குடிநீர் இணைப்பு குழாய் உடைந்து சுமார் 15 நாட்களாகியும் இன்னமும் சரி செய்யப்படவில்லை மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை. தனது விவசாய நிலத்தில் பொதுக் குழாயிலிருந்து திருட்டுத்தனமாக பைப் அமைத்து தண்ணீர் திருடும் ஆர்வம் போல கொஞ்சம் மக்கள் பிரச்சனைகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்கின்றனர்.

உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்
இருதயபுரம் சவேரியார் கோயில் அருகே செல்லும் சாலையில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பொதுக் குழாய் சேதமடைந்து இரண்டு வாரங்களாகியும் சரி செய்யப்படவில்லை பொது மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.ஆனால் நகர்மன்ற உறுப்பினர் பொதுக்குழாயிலிருந்து திருட்டு தனமாக இணைப்பு செய்து தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பயன்படுத்தி வருகிறார் என்ன கொடுமை ?

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ள திமுக கவுன்சிலர் சந்திரமோகன் சாதாரண டாக்ஸி டிரைவராக இருந்தவர். தற்போது ஒரு குவாலிஸ், ஸ்கார்பியோ மற்றும் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் வீடு, நிலம் என வாங்கி குவித்துள்ளார் என்கின்றனர். இவ்வளவு பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டால் தான் தெரியவரும். இவரின் தில்லாலங்கடி வேலைகளெல்லாம் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகராட்சித் தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர்களுக்கு தெரியுமா? இவர்கள் பணிகள் நடைபெறும் போது ஆய்வுகள் மேற்கொண்டனரா இல்லை வழக்கம்போல நிதியை மட்டும் ஒதுக்கிவிட்டு வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு அமைதியாகி விட்டனரா? இது குறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தீர விசாரணை செய்ய வேண்டும்.

பழநி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான இ.பெ.செந்தில்குமார் மிகவும் சுறுசுறுப்போடு பணியாற்றுபவர். தன் தொகுதியில் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்நின்று தீர்த்துவைப்பார். எந்த உதவிகளை யார் கேட்டாலும் தயங்காது செய்து கொடுப்பார். இ.பெ.செந்தில்குமாருக்கென்று கொடைக்கானலிலும் தொகுதியிலும் நல்லபெயர் உள்ளது.

பழநி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார்

கடந்த 2011 இல் இ.பெ.செந்தில்குமார் பழநி சட்டமன்ற தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு காரணம் கொடைக்கானல் பகுதியில் திமுகவினரின் மேல் மக்கள் கொண்டிருந்த அதிருப்தியின்மைதான். அதனால் தான் திமுகவிற்கு ஓட்டுக்கள் இங்கு எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது இதனால் அப்போதைய கொடைக்கானல் திமுகவினருக்கு இ.பெ.செந்தில்குமார் செம டோஸ் கொடுத்தார் என்பது கடந்த கால வரலாறு. இந்த நிலை நீடித்தால் கொடைக்கானல் பகுதியில் மக்கள் மத்தியில் திமுகவிற்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்குவங்கியை கடுமையாக பாதிக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

எனவே, மேற்படி மக்கள் விரோதப்போக்கை கையாண்டு வரும் கவுன்சிலர் சந்திரமோகன் மீது உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பழநி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஐஏஎஸ் ஆகியோர் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு கவுன்சிலர் சந்திரமோகனின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.