திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் முறைகேடாகவும், சட்டவிரோதமாகவும் ஜேசிபி, ஹிட்டாச்சி, போர்வெல் போன்ற ராட்சத கனரக வாகனங்களை தனியார் பயன்பாட்டிற்காக இன்றுவரை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து நாம் ஏற்கெனவே பலமுறை புகைப்பட ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கும், கொடைக்கானல் வருவாய்துறையின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். இருப்பினும் செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல எத்தனை முறை கூறினாலும் இவர்களின் காதுகளில் கேட்பதில்லை அதோடு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
கொடைக்கானலில் மலைத் தள விதிகளின் அடிப்படையில் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் இயக்குவதற்கு தடை உள்ளது.ஆனால் எவ்வித அனுமதியும் பெறாமல் கடந்த பத்து நாட்களாக தொடர்ச்சியாக கொடைக்கானல் விவசாய மலைப் பகுதிகளான பேத்துப்பாறை, கே.பி.எம்.பாறை, செண்பகனூர் வி.ஜி.பி. பகுதி, பிரகாசபுரம் ஆகியப் பகுதிகளில் இரவும் பகலும் ஜேசிபி, ஹிட்டாச்சி, போர்வெல் வாகனங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் உகார்த்தே நகர் குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பகலிலும், இரவிலும் தொடர்ந்து ஜேசிபி இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் என யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர். எப்படி எடுப்பார்கள் எல்லாம் மாமூல் மயம் தான்..
இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. சட்டவிரோதமாக ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயக்க வருவாய்துறையினரே உடந்தையாக இருக்கின்றனர். மேலும், இந்தப்பகுதிகளில் ஜேசிபி, ஹிட்டாட்சி என 55 வாகனங்கள் உள்ளது. பெரும்பாலான வாகனங்களுக்கு எப்ஃசி, இன்சூரன்ஸ் என இன்னும் பல முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை என்கின்றனர். இதுதொடர்பாக வட்டாரப்போக்குவரத்து துறையினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.நா.பூங்கொடி ஐஏஎஸ் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சட்டவிரோதமாக ராட்சத இயந்திரங்களை இயக்குபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்யவேண்டும். அதோடு இந்த சட்டவிரோத செயல்கள் நடைபெறும் பகுதியின் பொறுப்பு வருவாய்துறையினரை துறை ரீதியாக தண்டிக்க வேண்டும்.
நடவடிக்கை மேற்கொள்ளுமா நிர்வாகம் ?