திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஏக்கர் இடத்தில் இரண்டு சென்டில் வீடு கட்டி கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 24 ம் தேதி ரமேஷ் அவரது மனைவி மற்றும் ரவுடி கும்பலின் தலைவன் மூர்த்தி உள்ளிட்ட 25−பேர் அந்தோணிசாமி வீட்டிற்கு வந்து, இது எங்களது இடம் இடத்தை காலி செய்ய வேண்டும் என கூறி சாதியைச் சொல்லி பேசியுள்ளனர். பின்னர் வீட்டை சேதப்படுத்தி நாசம் செய்து, வீட்டிலிருந்த பொருட்களையும் சூறையாடியுள்ளனர். வீட்டில் இருந்த நான்கு பவுன் செயினையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்று காளீஸ்வரி என்பவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் ரவுடி கும்பலின் தலைவன் மதுரையைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் மதுரையைச் சேர்ந்த தனுஷ்குமார், கண்ணன், பரணி, பிரபாகரன், ராஜகணேஷ், முரளிதரன் மற்றும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த சேதுபதி, பாஸ்கர், மணி, அஜித் குமார் ஆகிய 10 பேர்களையும் கைது செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், வீடுகளை சேதப்படுத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுக்கு ஆதரவாக பலர் நீதிகேட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்தனர். அதன் பிறகுதான் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது என்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இதனையடுத்துதான் டி.எஸ்.பி முருகன் தலைமையில் காவல் துறையினர் மேற்படி 10 பேர்களை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானலில் அதிகரித்து வரும் ரவுடியிசத்தை ஒடுக்குவதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைகளின் இளவரசியை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுமா காவல்துறை?