திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்திலுள்ள எழில்மிகுந்த பூம்பாறை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டிற்குட்பட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வௌிமாநிலம், வெளிநாடு என கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்ற சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் இங்கு தினசரி அதிகமாக வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் தரிசனம் செய்ய எப்போதும் நீண்ட வரிசையும், மிகவும் கூட்டமாக இருக்கும். இருப்பினும், கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வழி மற்றும் சிறப்பு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எது வழி? சிறப்பு தரிசனத்திற்கு கட்டணம் எவ்வளவு என்று எதுவும் எழுதிப் போடாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோல் சிறப்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அதற்கான கட்டண ரசீதும் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து கேட்டால் மிஷின் வேலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள். ரசீது வழங்குவதில் ஏதேனும் தில்லுமுல்லுகள் நடைபெறுகிறதா எனவும் இந்துசமய அறநிலையத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கணேஷ் பாபு கூறியதாவது, தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்களில் உள்ளது போல் இந்த பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலிலும் தகவல் பலகை வைத்திடவும் மற்ற கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணம் எவ்வளவு? அவர்கள் செல்லும் வழி அதே போல் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வழி என்று கோவிலில் தகவல் பலகை வைக்க வேண்டும்.
அதேபோல் சிறப்பு தரிசனம் செய்வதற்கென்று தனியாக டிக்கெட் கவுன்டர் அமைத்து ஊழியர்களை நியமித்து முறையாக சிறப்பு தரிசன கட்டணத்திற்குரிய ரசீது டிக்கெட்டுக்கள் வழங்கிட வேண்டும். தற்போது மிஷின் ரிப்பேர் என்று கூறுவது சரியான பதில் இல்லை அது முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றார்.
எனவே, இந்து சமய அறநிலையத்துறையினர் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலில் முறையாக ரசீதுகள் வழங்காத ஊழியர்கள் மீதும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொண்டும், ரசீதுகள் வழங்குவதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத்துறை?