திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக பல்வேறு புகார்களை அடுக்கினார்கள். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது தொடர் மழையால் விவசாய நிலங்கள் சேதமாகி வருகிறது. அதே போல் வனவிலங்குகளாலும் விவசாயப் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இவைகளுக்கு அரசு சார்பில் உரிய இழப்பீட்டுத் தொகை  வழங்க வேண்டும். அதோடு, விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்.

தாண்டிக்குடி தொடக்க கூட்டுறவு சங்க வங்கியில் கடன் பெறுபவர்களிடம் வம்படியாக இலஞ்சம் கேட்கிறார்கள் இதனை கண்டிக்க வேண்டும். அதோடு இலஞ்சம் வாங்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாண்டிக்குடியில் குடிநீர் வசதி, இலவச பொதுக்கழிப்பறை, சாக்கடை வசதி, சாலை வசதி, நிழற்குடை வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். 

தாண்டிக்குடி ஜெ.ஜெ நகர்  மக்களுக்கு உடனே பட்டா வழங்கி அங்கு அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவேண்டும். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் தொடர்ந்து  நடைபெற்று வரும் குற்றங்களை தடுத்திட மன்னவனூர் கிராமத்தில் புதிய காவல் நிலையம் துவக்க வேண்டும்.

அதோடு, அரசு அனுமதி பெறாமல் இயங்கும் காட்டேஜ்கள் தங்கும் விடுதிகள் மற்றும் புதியதாக விதிமுறைகள் மீறி கட்டிவரும் கட்டிடங்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொடைக்கானல் பகுதிகளில் பூட்டியே கிடக்கும்  அனைத்து இலவச கழிப்பறைகளையும்  உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கட்டண கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.

மேலும், தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் பாரபட்சமின்றி உடனே அகற்றிட வேண்டும். இசேவை மையம் துவங்க வேண்டும், பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிளை நூலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

மேலும், நாங்கள் ஏற்கனவே கொடுத்த புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது துறைரீதியாக  நடவடிக்கை எடுப்பதோடு, எங்களின் மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.