கொடைக்கானலைச் சேர்ந்தவர் அஜய் இவரது மகன் பிரசன்னன்(18). இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினியல்துறை பிரிவில் படித்து வருகிறார். இவர் கடந்த 2018−ம் ஆண்டு இரண்டு கை மணிக்கட்டு மூலம் சொடுக்கு சுழலியை(FIDGET SPINNER) பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 21−முறை சுழற்றி கின்னஸ் உலக சாதனை படைத்தார். 2021−ம் ஆண்டு ஒரு நிமிடத்தில் 82−தோப்புக்கரணங்களை நிகழ்த்தி ” இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ” சாதனையும், அதே ஆண்டில் 88−தோப்புக்கரணங்களை நிகழ்த்தி “ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ” சாதனையும் நிகழ்த்தினார்.

சாதனை மாணவன் பிரசன்னன்

கொடைக்கானலில் 10−ம் வகுப்பு படித்த போது கொரோனா விழிப்புணர்வுக்காக சொந்தமாக பாடல் இயற்றி இசையமைத்து அவரே பாடியும் உள்ளார். மேலும் அவரே ஓவியம் வரைந்து அந்த ஓவியத்தை ரூ 25-ஆயிரத்திற்கு விற்பனை செய்து அந்தப் பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் மூலம் தனது கோரிக்கை ஒன்றை எழுதி அனுப்பினார் அந்த கோரிக்கையானது.. “மரத்திற்கு மனிதன் தேவையில்லை மனிதனுக்கு மரம் தேவை”

ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் படிக்கும் போது ஒரு மரக்கன்று நடவு செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை மத்திய அரசு சட்டமாக இயற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இவர் மாநில அளவில் குண்டு எறிதல் போட்டியில் பங்கு பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இசையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வாயிலாக சங்கீதம் வாய்ப்பாட்டு, வீணை போன்றவை பயின்று அதிலும் டிஸ்டிங்க்ஷனோடு வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது (2023) ஒரு கை மணிக்கட்டு மூலம் சொடுக்கு சுழலியை (FIDGET SPINNER) பயன்படுத்தி தற்போது ஒரு நிமிடத்தில் 39−முறை சுழற்றி கின்னஸ் உலக சாதனையை இரண்டாம் முறையாக பெற்று நமது பாரத நாட்டிற்கு பெருமையை தேடி தந்துள்ளார்.

இவரது திறமையை பாராட்டி கொடைக்கானல் பொது மக்கள் சார்பில் பிரசன்னனுக்கு பாராட்டு நிகழ்ச்சி தனியார் நட்சத்திர ஹோட்டலில்  நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தனியார் நட்சத்திர ஹோட்டல் பொது மேலாளர் ஶ்ரீஜித் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை சான்றிதழ்கள், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார். இந் நிகழ்ச்சியில் தொழிலதிபர் கனகதாஸ், உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.