இதுவரை நிலவிய பகைமை உணர்வுகளை துடைத்து தூரப் போடும் விதமாக, கர்நாடக கன்னடர்-தமிழர் ஒற்றுமை மற்றும் கலாசார மாநாடு என்ற பெயரில் இரு மொழி பேசும் மக்களையும் இணைக்கும் மாநாடு பெங்களூரில் வரும் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பாக நமது “ஒன்இந்தியாதமிழிடம்” பேசிய, மாநாட்டு ஏற்பாட்டாளரும், தாய்மொழி கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.குமார் கூறியதாவது: கர்நாடகாவில் வாழும் தமிழர்கள், இங்குள்ள கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். மொழியை கற்றுத் தேர்ந்துள்ளனர். இருப்பினும் சிலரால் தமிழர்கள் எதிரிகள் போல கட்டமைக்கப்பட்டு வந்தது. அந்த பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநாடு நடத்துகிறோம். காவிரி பிரச்சினை உள்ளிட்ட எந்த விஷயத்திலும், அரசியல் கட்சிகளைப் போலவேதான், தமிழர்களும் மாநிலத்திற்கு ஏற்ப நிலைப்பாட்டை எடுத்துள்ளோமே தவிர கர்நாடக தமிழர்கள் கர்நாடகாவிற்கு எதிராக நடந்து கொண்டது இல்லை.
மலேசியா, சிங்கப்பூர் உட்பட 56 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அந்தந்த நாட்டு கலாசாரத்தையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். அப்படித்தான் கர்நாடக தமிழர்களும் வாழ்கிறார்கள், வாழ ஆசைப்படுகிறார்கள். இதை கன்னட அன்பர்கள் அனைவருக்கும் புரிய வைக்கும் வகையில் இந்த ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது. பல முறை இப்படியாக, தமிழர்-கன்னடர் ஒற்றுமைக்கு முன்முயற்சி எடுக்கப்பட்டபோதிலும் அது வெற்றிகரமான முயற்சியாக மாறவில்லை. ஆனால், இந்த முறை, அனைத்தும் சிறப்பாக நடந்துவிட்டது. கன்னட ரக்ஷனா வேதிகே போன்ற கன்னட சங்கங்களைச் சேர்ந்த நாராயண கவுடா, பிரவீன் ஷெட்டி போன்றோரும் மாநாட்டுக்கு தங்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். அனைத்து கன்னட அமைப்புகளுமே இந்த முன்முயற்சியை வரவேற்றுள்ளன. அப்படிப் பார்த்தால், இது ஒரு புதிய அத்தியாயமாகும். கட்சி, ஜாதி என எந்த பேதமும் இன்றி, தமிழர்களும் கன்னடர்களும் இந்த நிகழ்ச்சியில் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். கர்நாடகா முழுக்க சுற்றுப் பயணம் செய்து மாநிலம் முழுக்க பரவியுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் ஆதரவை திரட்டியுள்ளேன். அவர்கள் எல்லோரும் திரளாக மாநாட்டில் பங்கேற்க வருகிறார்கள். முதல் முறையாக தமிழர்கள் ஒரு குடையின் கீழ் திரள்கிறார்கள் என்பதே மகிழ்ச்சியாக உள்ளது. விராஜ்பேட் எம்எல்ஏ பொன்னண்ணா, மடிகேரி எம்எல்ஏ மந்தர் கவுடா என எம்எல்ஏக்களே வாகனங்களை ஏற்பாடு செய்து மாநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். பல லட்சம் மக்கள் வாழும் கர்நாடகாவில் பல்வேறு கட்சிகளில் தமிழர்கள் இருந்தாலும், தமிழர் ஒன்றுபடவில்லை என்பதால் தமிழர் ஒருவர் கூட எம்.பி.யாகவோ, எம்எல்ஏ-வாகவோ இல்லை. எனவே மொத்த கர்நாடக தமிழர்களும் ஒன்றுகூடும் இந்த மாநாட்டில் பங்கேற்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆர்வத்தோடு விசாரிக்கிறார்கள். தொல்.திருமாவளவன், சீமான், வைகோ போன்ற தமிழக அரசியல் தலைவர்கள் மாநாட்டுக்காக வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். இந்த மாநாடு கர்நாடக வரலாற்றிலேயே மிக முக்கியமானதாக அமையப்போகிறது. இதற்கு பெரும் திரளாக தமிழர்கள் பல்வேறு ஊர்களில் இருந்தும் வர வேண்டும். ஆதரவு தரவேண்டும். இவ்வாறு எஸ்.டி.குமார் தெரிவித்தார்.
கர்நாடக கன்னடர்-தமிழர் ஒற்றுமை கலாச்சார மாநாடு அக்டோபர் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பெங்களூர் நகரின் பெல்லாரி சாலையில் அமைந்துள்ள அரண்மனை மைதானத்தில் நடைபெற உள்ளது. பிரின்சஸ் ஷ்ரைன், நுழைவு வாயில் எண் 9 வழியாக மக்கள் வரலாம். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மாநாடு நடைபெற உள்ளது. உணவு திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிட்டி ரயில் நிலையம், கன்டோன்மென்ட் ரயில் நிலையம், மெஜஸ்டிக் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து காலை 8 மணி முதல் 10 மணிவரை ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற ஊர்களில் இருந்து வரும் தமிழர்கள் அரண்மனை மைதானம் செல்ல அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். எஸ்.டி.குமார் அவர்களின் தொடர்பு எண்: 9343765448.
மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருரையாற்ற உள்ளார், கர்நாடக முதல்வர் சித்தராமையா. துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சிறப்புரையாற்ற உள்ளார். உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, தினேஷ் குண்டுராவ், கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டு மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி சிறப்புரையாற்றுகிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எம்.பி. பி.சி.மோகன் உள்ளிட்டோரும் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.