திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திலுள்ள கணியூர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும். சுதந்திர போராட்ட வீரர் மருதாசலம் பிள்ளை, ஜமீன் புலவர் சுக்கூர் போன்ற சான்றோர்களையும் திராவிட இயக்கங்களான திமுகவுக்கு கே.ஏ.மதியழகனையும்,அதிமுகவுக்கு கே.ஏ.கிருஷ்ணசாமியையும் அளித்துள்ளது. ஆக, திராவிட இயக்க வரலாற்றில் அழிக்க இயலாத தடத்தை பதித்துள்ளது கணியூர்.
கொள்கைப் பிடிப்புள்ள கணியூர் இளைஞர்கள் சமூக விழிப்புணர்விலும், பொதுப்பணிகளிலும், பசுமைப்பணிகளிலும், தவறுகளை தட்டிக்கேட்பதிலும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல! அதோடு, எண்ணற்ற சமூக ஆர்வலர்கள் நிறைந்த பகுதியாகும்.
கொடிக்கால் விவசாயத்தில் கொடிகட்டிப்பறந்த சமயத்தில் இங்கு விளைந்த தரமான வெற்றிலைகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. வெற்றிலைக்கு பெயர்போன ஊர். இங்கு நெல் விவசாயம் அதிகம் என்பதால் முன்பு அதிகளவில் அரிசி ஆலைகள் இயங்கி வந்தது. தற்போதுவரை சுற்றியுள்ள குக்கிராம மக்களுக்கும், வடக்கன் சகோதரர்களுக்கும் நகரமாக திகழ்ந்து வருகிறது கணியூர்.
மேற்கண்ட சிறப்புக்களை போலவே, சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளை புறந்தள்ளி, கடந்த 20 ஆண்டுகளாக கணியூர் இளைஞர்கள் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். 21 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் கொண்டாட்டத்தை 16.01.2024 மற்றும் 17.01.2024 ஆகிய இரு தினங்களிலும் சிறப்பாக கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் விழா அழைப்பிதழ்களை கொண்டு சேர்க்கும் பணியை இளைஞர் படையினர் செய்து வருகின்றனர். அழைப்பிதழை வழங்கவரும் இளைஞர்களுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பை அளித்து ஊக்குவித்து வருகின்றனர்.
16.01.2024 செவ்வாய் கிழமை தை 2 ஆம் நாளில் காலை 8.00 மணிக்கு திருவள்ளுவர் படத்திறப்புடன் தொடங்கி அதன் தொடர்ச்சியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மாலையில் திருக்குறள், பாவேந்தர் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியும், சிறப்பு பட்டி மன்றமும், தமிழ்ப் பெயர் சூட்டியவர்களுக்கு பாராட்டு நிகழ்வுடன் அன்றைய தினம் நிறைவடைய உள்ளது.
17.01.2024 புதன்கிழமை தை 3 ஆம் நாளில் காலை 10 மணிக்கு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில், தமிழர் இசையான பறையிசை, நையாண்டி மேள நிகழ்வோடு தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மற்றும் களரி (உயிர் கலை சிலம்பு பயிற்சி பள்ளி) நிகழ்த்தப்படுகிறது. மாலை 6 மணியளவில் திரைப்படப் பாடல்கள் தவிர்த்து, குழந்தைகளுக்கான கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இரவு 7 மணியளவில், விசாரணை மற்றும் யாத்திசை, திரைப்படத்தின் கதையின் நாயகன், லாக்கப் நூல் ஆசிரியர் (சாமான்யனின் குறிப்புகள்) மு.சந்திரகுமார் சிறப்புரையாற்றுகிறார். பின்பு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் தமிழர் திருநாள் விழா நிறைவுபெற உள்ளது.
ஊர், மதம், சாதி, சடங்குகள், தெய்வங்கள் ஆகிய அளவு கோல்களை முன்னிறுத்தி நடைபெறும் விழாக்களை திருவிழா என்கிறோம். ஆனால், மொழியை மட்டுமே இணைப்பாக கொண்டு ஒர் நிலப்பகுதியில் ஒற்றுமையுடன் கொண்டாடும் இதுபோன்ற விழாக்களே பெருவிழாக்களாகும்.
-தமிழால் இணைவோம்-
-அ.முக்தார்.