திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட 1.கடத்தூர் ஊராட்சி பள்ளி முதல் அர்ச்சுனேஷ்வரர் கோயில் வரை 1.5 கிமீ தொலைவுள்ள சாலை 2. கடத்தூர் ஆதிதிராவிடர் காலனி முதல் சிவன் கோவில் மெயின் ரோடு வரை 1 கிமீ தொலைவுள்ள சாலை என இரு சாலைகளையும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


பழநியை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் இந்த சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடத்தூர் ஊராட்சி பள்ளி முதல் அர்ச்சுனேஷ்வரர் கோயில் வரை 1.5 கிமீ தொலைவுள்ள சாலையை அமைக்கும் முன்னர் ஏற்கெனவே இருந்த பழுதான சாலையை “மில்லிங்” செய்யாமல் அதாவது, பழைய சாலையை சுரண்டி எடுக்காமல், புதிய சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க பள்ளிக்கூடம் முதல் பேருந்து நிலைய குதிரை சிலை வரை மட்டும் மில்லிங் செய்துள்ளனர். மில்லிங் செய்யப்பட்ட பகுதிக்கு மட்டும் தற்போது வெட்மிக்ஸ் கலவையினால் ஜல்லி பரப்பப்பட்டு சமன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெட்மிக்ஸ் கலவை சரியான அளவீட்டிலும், நல்ல தரத்திலும் இல்லாததால் இதன் உறுதித்திறன் குறைவுதான். ஏனெனில், சரியான அளவீட்டில் வெட்மிக்ஸ் கலவை இருந்திருந்தால் ஜல்லிக்கற்கள் ஆங்காங்கே பிதுங்கி வராது என்கின்றனர்.

ஊராட்சி பள்ளி முதல் – அர்ச்சுனேஷ்வரர் கோயில் வரையிலான சாலையில் மில்லிங் செய்யப்படாத எஞ்சியுள்ள பழைய சாலை


அதோடு மேற்படி வெட்மிக்ஸ் கலவை அமைக்கப்பட்டவுடன் சாலை இருபுறங்களிலும் கிராவல் மண் அணைக்க வேண்டும் (இது சாலைக்கு கூடுதல் பிடிமானமும் கூட). அப்போதுதான் சாலையின் பக்கவாட்டில் இருந்து இருசக்கர வாகனங்கள் சென்று-வரும்போது வாகனங்கள் இடறாமல் விபத்து ஏற்படாமல் இருக்கும். ஆனால் இந்த சாலையிலோ “ஒப்புக்குச் சப்பாணியாக” கிராவல் மண் அணைத்துள்ளனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதுபோன்ற தார்ச்சாலைகள் அமைக்கும் போது வெட்மிக்ஸ் கலவையின் போதும், தார்ச்சாலை அமைத்த பின்னரும் அரசு வகுத்துள்ள விதிப்படி குறிப்பிட்டுள்ள செ.மீ உயரத்திற்கு கிராவல் மண் சாலையில் இரு ஓரங்களிலும் முறையாக அணைத்துள்ளனரா என்று என்று மேற்பார்வை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.


இதேபோல, கடத்தூர் ஆதிதிராவிடர் காலனி முதல் சிவன் கோவில் மெயின் ரோடு வரை 1 கிமீ தொலைவுள்ள சாலையில் வெட்மிக்ஸ் கலவை போட்டு ஒருமாதம் கடந்துவிட்டது ஆனால் இன்றுவரை தார்ச்சாலை அமைக்கவில்லை என்கின்றனர். தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தாமதமாவதால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கல் பெயர்ந்து வருகிறது. சுற்றுப்பகுதியிலுள்ள மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இவ்வழியை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் கிடுகிடுவென குதித்து குதித்து ஆடியபடியேதான் செல்ல முடிகின்றது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த சாலையில் அவ்வப்போது சிறு,சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. பெரியளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி ஆகும் முன்னரே இந்த சாலைப் பணியை முடிக்க வேண்டும் என்கின்றனர்.

ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆதிராவிடர் காலனி – சிவன் கோயில் சாலை

எனவே, தமிழக அரசு வகுத்துள்ள விதிகளைப் பின்பற்றி மேற்படி வெட்மிக்ஸ் கலவை தரமானதாக அமைக்கப்பட்டுள்ளதா என்றும், குறிப்பிட்டுள்ள செ.மீ உயரத்திற்கு கிராவல் மண், சாலையின் இரு ஓரங்களிலும் முறையாக அணைத்துள்ளனரா என்று மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் இஆப ஆய்வு மேற்கொண்டு அதன் பின்னரே தார்ச்சாலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

-அ.முக்தார்.