இரானுக்கு எதிராக தாங்கள் ஒரு ‘முன்னெச்சரிக்கை தாக்குதலை’ நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இரானிய ஊடகங்களின்படி, தெஹ்ரான் நகர மையத்தில் மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.இரானிய தலைநகரின் ரிபப்ளிக் பகுதியை பல ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.தெஹ்ரானில் வெடிப்புகள் பற்றிய கூடுதல் தகவல்கள் இப்போது இரானிய ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
தெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கில் பல புதிய வெடிப்புகள் கேட்டதாக இரானில் உள்ள, அரசுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

‘அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து தாக்குதல்’
சனிக்கிழமை காலை இரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது வான்வெளியை பொதுமக்களுக்கான விமானங்களுக்கு மூடியுள்ளது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி முகமை, இரானின் வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஊடகங்களின் கூற்றுக்களின்படி, இரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து செயல்படுகின்றன.

இஸ்ரேலில் அவசரநிலை
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று (பிப்ரவரி 28) காலை வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் முழுவதும் ஒரு சிறப்பு மற்றும் நிரந்தர அவசரநிலையை” அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் முழுவதும் ஒலித்த சைரன்
உள்ளூர் நேரப்படி சுமார் 08:15 மணிக்கு இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிகள் கேட்டன, இது சாத்தியமான ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தவும், போரைத் தவிர்க்கவும் அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தத்திற்கான ராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் இந்த இஸ்ரேலியத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் இரான் சில சலுகைகளை அளித்திருந்தது, இருப்பினும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்குமாறு அதன் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முன்னதாக இரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “பேச்சுவார்த்தைகள் நடக்கும் விதம் குறித்து நேற்று தான் ‘மகிழ்ச்சியடைவில்லை'” என்று கூறினார்.
2003-இல் அமெரிக்கா தலைமையிலான இராக் மீதான படையெடுப்பிற்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க ராணுவக் குவிப்பிற்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார், ஆனால் இப்போது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படக்கூடும் என்பதை விளக்க அவர் அதிகம் எதையும் செய்யவில்லை. இதற்கிடையில், அத்தகைய தாக்குதலுக்கு முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என இரான் கூறியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இந்த ‘முன்னெச்சரிக்கை தாக்குதல்’ (pre-emptive strike) இஸ்ரேல் நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக” என்று கூறினார்.
கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியது, இது 12 நாள் போருக்கு வழிவகுத்தது. அமெரிக்காவும் இறுதியில் மோதலில் இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு, இரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்தது.
சமீபத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தனது நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்திருந்தார், மேலும் இரானின் அணுசக்தித் திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒப்பந்தத்திற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இரான் தனது ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிப்பதையும், காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்பொலா, இராக்கின் போராளிகள் மற்றும் ஏமனில் ஹூத்திகள் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள அமைப்புகளுக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நிராகரித்தது, அந்தக் கோரிக்கைகள் அதன் இறையாண்மையை மீறுவதாகக் கூறியது.
-நன்றி பிபிசி.





