தென்தமிழகப் பகுதிகளில் பெருமழை பெய்து கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நகர்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தொழிற்சாலைகள், வணிகவளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. சாலைகள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஆற்றுப் பாலங்களை அடித்துச்சென்றது காட்டாற்று வெள்ளம். பல வீடுகள் இடிந்து தரைமட்டமானது. ஆறுகள், வாய்கால்கள், கண்மாய்கள், தடுப்பணைகள், குளங்கள் நிரம்பி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களில் நீர் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதோடு ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் இரக்கமின்றி இழுத்துச்சென்றது வெள்ளம். இந்த பெருமழை மனித உயிர்களையும் காவு வாங்கியது.  

சாலைகளில் வெள்ளம்
பயிர்கள் சேதம்

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. உணவுக்கும், இருப்பிடத்திற்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் அல்லல்பட்டுப் போனார்கள். இதனால் பாதிப்படைந்த மக்கள் அரசின் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இவர்களுக்கு அரசு அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் வழங்கியதோ இல்லையோ தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து உதவிக்கரம் நீட்டியதால் கோரதாண்டவம் ஆடி பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து சற்று ஆறுதல் அடைந்தனர்.

விவசாய நிலங்களுக்குள் புகுந்த வெள்ளம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் வாயிலாக நிவாரணப் பொருட்களும், பாதிப்பிற்கு ஏற்றவாறு சிறியளவு பாதிப்பிற்கு 1000 ரூபாய் எனவும் பெரியளவில் பாதிக்கப்பட்டு இருந்தால் 6 ஆயிரம் ரூபாயும் என அரசு அறிவித்து உதவித்தொகையை வழங்கி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை அளவுகோல் வைத்து அளந்து நோக்கியது. அடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் விவசாய நிலங்களின் பாதிப்பு குறித்தும் வீடுகள் இழந்தவர்களின் பாதிப்பு குறித்தும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இழந்தவர்களின் பாதிப்புகள் குறித்தும் கணக்கெடுக்கும் பணியையும் துவங்கியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாாிகள் அடங்கிய குழுவினர் கடும் வெள்ள பாதிப்பிற்கு உண்டான தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் குருவிகுளம், மேலநீலித நல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் நின்று விவசாய நிலங்களின் பாதிப்புகளை பெயரளவிற்கு பார்த்துச் சென்றார்கள் என்கின்றனர்.

வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன், தென்காசி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தனுஷ் எம் குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா என்ற ராஜா ஈஸ்வரன், நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, தன்னார்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் முன்னிலையிலும் சங்கரன்கோவில் சமுதாய நலக்கூடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Apple என அச்சிடப்பட்ட பையில் 5 கிலோ அரிசி, காய்கறிகள், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

உயர்ரக அரிசி பைக்குள் ரேசன் அரிசி

இந்நிலையில் சமுதாய நலக் கூடத்தில் இருந்து வெளியே வந்து அமைச்சர் வழங்கிய அரிசி பையை கர்ப்பிணி பெண் ஒருவர் வெளியே வந்து பிரித்துப் பார்த்த போது பையில் இருந்த அரிசி ரேசன் அரிசி என்பதை பார்த்ததும் அதிர்ந்துதான் போனார். சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீண்ட நேரம் காத்திருந்து இந்த ரேசன் அரிசியைத்தான் வாங்க காத்து நின்றோமா என கேள்வி எழுப்பி கோபமடைந்தார்.

கணவருடன் கர்ப்பிணிப்பெண்

ரேசன் அரிசியை வழங்குவதற்கு எதற்கு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் எல்லாம் இங்கு வர வேண்டும் என கோபத்துடன் கேட்ட அவர் தன்னை அழைத்துப் போக வந்த கணவனிடம் அமைச்சர் ரேஷன் அரிசி வழங்கியது குறித்தும் வேதனையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் செல்வம் இதுபோன்று ரேஷன் அரிசி வழங்குவதற்காக எதற்காக அமைச்சர்கள் வரவேண்டும் எனவும் ரேஷன் அரிசி கடத்துவதற்கும் இவர்கள் பையில் அடைத்து வைத்து வழங்குவதற்கும் என்ன வித்தியாசம் என கேட்டதுடன் ஒரு பையில் ரேஷன் அரிசி சாக்குடன் சென்றால் வழிமறித்து கைது செய்து வழக்குப் பதியும் காவல்துறை பை பையாக ரேஷன் அரிசியை அமைச்சர் கையால் வழங்கச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என கேட்டு கொந்தளித்தார்.ஓட்டு போட்ட மக்களை பொய்யாக ஏமாற்றுவதே இந்த விளம்பர அரசின் வேலை என அவர் திமுக அரசை சாடியதுடன் நிவாரணம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை இப்படியெல்லாம் கொள்ளை அடிக்காதீர்கள் என அவர் அரசை கடிந்து கொண்டார்.

அதேபோல் பாட்டத்தூர் அருகே உள்ள சுமதி என்ற பெண்மணி கூறுகையில்.. தான் பணி செய்து கொண்டிருந்த தோட்டத்திற்கு வந்து ராஜா எம்எல்ஏ தன்னிடம் ஓட்டு கேட்ட போது வெற்றி பெற்று வந்தவுடன் உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என தெரிவித்தவர் இன்று இந்த ரேஷன் அரிசியை வழங்கியதாகவும் இதை அவர் உணவாக சமைத்து உண்பாரா என்றும் கேள்வி எழுப்பினார். தான் வேலைக்குச் சென்றால் 250 ரூபாய் சம்பளத்துடன் வீடு திரும்புவதாகவும் இன்று அமைச்சர் நிவாரணம் தருவதாக கூறி டோக்கன் வழங்கியதால் சமுதாய நலக் கூடத்தில் காத்திருந்து கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட போதும் முண்டியடித்துச் சென்று காய்கறிப்பை கிடைக்காத போதும் அரிசியை மட்டும் வாங்கி வந்ததாகவும் கூறினார். மேலும், சபரிமலைக்குச் செல்ல மாலையிட்டுள்ள தன் கணவனுக்கு நல்ல சாப்பாடு சமைத்துப் போட வேண்டும் என நினைத்து பையை பிரித்துப் பார்த்தபோது ரேஷன் அரிசியை கண்டு திகைத்துப் போனதாகவும் இதை வழங்குவதற்கு இந்த அமைச்சர் எதுக்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வர வேண்டுமா என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

என்ன இருந்தாலும் சரி வருவாய்த்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக உயர்ரக பையில் போட்டு பையை மூடி பொது மக்களுக்கு அல்வா கொடுத்த அமைச்சர் மட்டுமல்ல எம்பி, எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட அனைவரின் செயலும் வன்மையாக கண்டிக்கத்தக்கதுதான். விளம்பரத்திற்காக மட்டுமே மக்களை நாடுவதாகவும் கண்துடைப்பிற்காக மட்டுமே நிவாரணங்கள் வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தங்களுக்கு வழங்கிய ரேஷன் அரிசியை இவர்கள் பொங்கிச் சாப்பிட முடியுமா என கேள்வி எழுப்பினர்.

நிவாரண பொருட்களில் ரேசன் அரிசியை உயர் ரக பையில் அடைத்துக் கொடுத்தது யார்? இந்த அரிசியை தன்னார்வ அமைப்பு வழங்கியதா அல்லது அரசு கொள்முதல் செய்ததா என்பதை விசாரிக்க வேண்டும்? அரிசி பைகளை ஏற்பாடு செய்தவர்கள் யார்? இதில் இருந்த ரேசன் அரிசி எங்கிருந்து எடுத்துவரப்பட்டது? உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்த பிரச்சனையை தீவிரமாக விசாரித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் தான் பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

பேரிடரில் வாழ்விழந்து நிற்கதியாய் நிற்கும் மக்களை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்?