பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் பேசிவருவதாவது…

‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை

கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த

வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்’ என்று பாரதியார் சுதந்திரப் போராட்டம் குறித்து உருக்கமாக இப்படி பாடியிருக்கிறார். ஆக, எனக்கும், செயல் தலைவருக்கும் போய் கொண்டிருக்கும் பிரச்னை முழுவதும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.’காத்து போகாத இடத்திற்கு காவல் துறை போகும்’ என்று காவல்துறையினர் கூறுவார்கள். அதே மாதிரி, ஊடகத்தினர் சளைச்சவர்கள் அல்ல.

எங்கள் இருவருடைய சமரசப் பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. அவர்கள் இங்கே வந்தார்கள்… நான் அங்கே போனேன்… பேச்சுவார்த்தை சென்றது. ஆனால், கடைசியில் பேச்சுவார்த்தை ‘டிரா’வில் முடிந்துவிட்டது.14 பஞ்சாயத்துக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் நான் தொடங்கிய 34 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் . இது தான் தலைவிதி என்று ஏற்றுக்கொண்டேன். எனக்கு அவமானமாக இருக்கிறது!

என்ன அதிசயம்? எல்லாரும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். ‘நான் இங்கே இருந்துகொண்டு கட்சியை வளர்ப்பது… அவர் வெளியே சென்று மக்களைப் பார்ப்பது’ – அது தான் அவர்கள் சொன்ன தீர்ப்பு. 14 பஞ்சாயத்துகளோடு இதுவும் ஒரு பஞ்சாயத்து ஆனது.

அன்புமணிக்காக தலைவர் பதவி விட்டுத்தர தயார் என்று கூறினேன். அதற்காக, மாநாட்டிற்கு முன்பு, கௌரவ தலைவர், சமூக முன்னேற்ற சங்கத்தினுடைய தலைவர் இருவரும் அன்புமணியை சந்திக்க செல்ல இருந்தனர். ஆனால், ‘வரவேண்டாம்… போன்லேயே சொல்லுங்க’ என்று அவர் கூறிவிட்டார்.

‘மாநாட்டு மேடையிலேயே இதை எழுதி தருகிறேன் என்று ஐயா சொல்கிறார்’ என்று அவர்கள் அவரிடம் பேசினார்கள். அதற்கு அன்புமணி, ‘அவரை (ராமதாஸை) நம்ப முடியாது’ என்று கூறிவிட்டார். ஆக, நான் தயாராக இருந்தும், அப்படி நடந்துவிட்டது. இதன் பிறகு தான், ‘நீயா… நானா’ என்று என்னுள் உள்ள இயற்கையான கோபம் பொங்கியது.’ராமதாஸ் பெயரைத் தான் பின்னால் போட்டுக்கொள்கிறோமே… அவனுக்கு என்ன தர வேண்டும்; கொள்ளு பேரன்களோடு விளையாடட்டும்’ என்று கூறினார். என்னால் அப்படி இருக்க முடியாது.மக்களோடு 46 வருடங்களாக பழகி வருகிறேன். அவர்கள் என்னை உயிராக நினைத்து வருகிறார்கள். அவர்களை நான் உயிருக்கும் மேலாக கடவுளாக நினைக்கிறேன். அவர்கள் என்னை குலதெய்வமாக நினைக்கிறார்கள். நான் அவர்களைத் தொண்டர்களாக அல்ல… வழிகாட்டிகளாக நினைக்கிறேன்.

இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? உரிமை இல்லையா என்று கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது.” என்றார். தொடர்ந்து, “கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே, என்னை கழுத்தைப் பிடித்து தள்ளும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இருந்திருக்கின்றன. இருந்துகொண்டிருக்கின்றன.என்னைப் பார்க்க வரும் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் தொலைப்பேசியில் பேசி அவரே தடுத்து நிறுத்துகிறார். இப்படி என்னை மானபங்கம் செய்கிறார்.

அன்று அமைதி காத்திருந்தால், அன்புமணிக்கு தானாக தலைமை வந்திருக்கும். அன்று அதிகாலை 3 மணி வரை மாவட்ட செயலாளர்களிடம் பேசியிருக்கிறார்கள். இதில் தப்பித்தவறி 8 பேர் என்னை பார்க்க வந்தார்கள்.நானே முன்நின்று முடிசூட்டு விழாவை நடத்தி இருப்பேன்!

ஒரு பொய்யான தகவலை சொல்லி என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடுக்க பார்க்கிறார் என்று கூறியிருக்கிறார். இதை ஒரு மூடன், மூர்க்கன், முட்டாள் யாராவது செய்வார்களா? இதெல்லாம் நடக்காமல் இருந்திருந்தால், ஓரிரு ஆண்டுகளில், நானே முன்நின்று உனக்கு முடிசூட்டு விழாவை நடத்தி இருப்பேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு முடிசூட்டு விழா நடந்தது. அப்போது அவர் தான் தலைவர் ஆனார். நான் அப்போது ஆனந்த கண்ணீர் விட்டேன்.’தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று இரு நிகழ்வுகளில் என் அருமை நண்பர் பழ.கருப்பையா கூறியிருந்தார். ‘தந்தைக்கு பிறகே தனயன், ஐயாவுக்கு பிறகே அன்புமணி’ என்று இப்போது எல்லோரும் சொல்கிறார்கள்.குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே தர்மம் ஆகும்.” என்றார்.

“என்னை குலசாமி என்று கூறிக்கொண்டே, என் நெஞ்சுகுலைகளில் குத்துகிறார்கள்… எங்களுக்கு எல்லாம் ஐயா தான் என்று சொல்லிகொண்டே, என்னை அதள பாதாளத்தில் தள்ளுகிறார்கள்… எங்களுக்கு அனைத்துமே ஐயா என்று கூறிகொண்டே, என்னை அவமானப்படுத்துகிறார்கள்… ஐயாவின் பெருமையை பேசுவதே எங்களுடைய நோக்கம் என்று கூறிக்கொண்டே, என்னை சிறுமைப்படுத்துகிறார்கள்… ஐயாவின் லட்சியமே எங்கள் லட்சியம் என்று கூறி, என்னையே இலக்காக்கி குறிவைத்து தாக்குகிறார்கள். இதெல்லாம் எனது மனகுமுறல்கள். இதை நான் உருவாக்கிய சமூக வலைதள பிரிவின் மூலமே செய்கிறார்கள். என் கைகளை வைத்தே என் கண்ணைக் குத்திக்கொண்டேன்.

உயிரோட உள்ள என்னை உதாசீனப்படுத்திவிட்டு, என்னுடைய உருவப் படத்திற்கு உற்சவம் நடத்துகின்றனர். என்னை நடைபிணமாக்கி, என் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் செய்கிறார்களாம். இது எல்லாமே நாடகம். இதில் ஒவ்வொருவரும் நடிகர்களே.ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு டெல்லிக்கு சென்றிருந்தோம். நான், கௌரவ தலைவர் ஜி.கே மணி, அன்புமணி சென்றிருந்தோம். அப்போது, ‘அப்பா… நான் இந்தக் கட்சியை பார்த்துகொள்கிறேன்’ என்று கூறினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் பிறகு, ‘நான் தவறாக பேசியிருந்தால் மன்னித்துவிடுங்கள்’ என்று சொன்னார். அங்கே இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன். இது நடந்து ஆறு – ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போதே அவருக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கிறது.

ஒரு நாள் மன உளைச்சலில், ‘யாரையும் சந்திக்க வேண்டாம்’ என்று மகாபலிபுரத்தில் உள்ள ஜெகத்ரட்சகன் ஹோட்டலுக்கு சென்று தங்கி இருந்தேன். இதை தெரிந்துகொண்ட சௌமியா அங்கே வந்தார். ‘தலைவர் ஜி.கே மணியை மாற்றிவிடலாம்; அடுத்த புதன்கிழமை நல்ல கிழமை. மண்டபம் பார்த்துவிட்டேன்’ என்று கூறினார். நான் அவரிடம் விசாரிக்கிறேன் என்று கூறினேன். ஜி.கே மணி, ‘நான் தயார். ஆனால், என் தம்பிக்கும், மைத்துனருக்கு ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளது. அதனால், 45 நாட்களுக்கு பிறகு, இதை செய்யலாம்’ என்று கூறினார். நான் இதை சௌமியாவிடம் தெரிவிக்க, அவரும் ஒப்புக்கொண்டார்.

ஒன்றரை மாதத்திற்கு பிறகு, முடிச்சூட்டு விழாவில் அன்புமணியை ஆரத்தழுவி தலைவராக்கினோம்… ஆனந்த கண்ணீர் விட்டேன். அப்போது நான், ‘என் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் யாரும் கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அரசியலில் ஈடுபடக்கூடாது’ என்று கூறினேன். ஆனால், இப்போது நடப்பதெல்லாம் உங்களுக்கு தெரியும்.பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். இரு பெரிய ஜம்பவான்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். ஆனால், நல்ல பதில் தரவில்லை. தேர்தல் முடிந்தப் பிறகு, அவருக்கு தான் எல்லாம் செல்லப்போகிறது. அரசியலில் வாரிசு என்பது கிடையாது. நான் யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்துவிட்டு போவேன்.

அன்புமணி என் பேச்சை கேட்காமல் இருப்பதற்கு பாஜக பின்புலம் கிடையாது. யார் சொன்னாலும் அன்புமணி கேட்கமாட்டார். அன்புமணியை எப்போதும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கமாட்டேன்.சென்ற தேர்தலில் நான் நிறுவனராக இருந்து தான் தேர்தலை சந்தித்தேன். 40 – 50 தொகுதிகள் எடுத்து வேலை செய்தோம். ஆனால், அவர் போதுமான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. நாம் 40 – 50 தொகுதிகளில் வலுவாக இருந்தால் தான், கூட்டணி பேச முடியும். மேலும், அப்போது தான் நாமும் வெற்றி பெற முடியும்… நம்முடன் கூட்டணி வைக்கும் பெரிய கட்சியும் வெற்றிபெற முடியும்.கடந்த தேர்தலில் அன்புமணி தருமபுரியில் நிற்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு அப்போதைய பாஜக மாநில தலைவர் விருந்திற்கு சென்று வந்தார்.

அதன் பிறகு, ‘நான் நிற்கவில்லை… சௌமியா நிற்கிறார்’ என்று கூறினார். நான் முன்னரே கூறியிருந்ததுப்போல, என் குடும்பத்து பெண்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று கூறினேன். என் குடும்பமே என்னிடம் கெஞ்சி கூத்தாடியது. நான் பின்னர் ஒத்துக்கொண்டேன்.ஆடிட்டர் குருமூர்த்தி என்னை இங்கே (தைலாபுரம்) சந்தித்தார். அதன் பிறகு, சென்னைக்கு அழைத்தார். அங்கு இருவரையும் சந்தித்தேன்.தேர்தல் முடிந்தப் பிறகு, அன்புமணியே எல்லாம் எடுத்துகொண்டு போகட்டும். அதுவரை நான் தலைவராக இருந்துகொள்கிறேன். கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன். தவெக உடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை” என்று பேசியுள்ளார்.

பாமகவின் மூத்த நிர்வாகிகளும், ராமதாசுடன் இணைந்து பணியாற்றிய முக்கிய பொறுப்பாளர்களும் ராமதாஸின் நிலையறிந்து புழுங்கி வருகின்றனர்.