சைக்கிளில் சென்று தாமதமாக உணவு டெலிவரி செய்த இளைஞரை பார்த்த வாடிக்கையாளர் அவரை திட்டாமல் அவருக்கு கொடுத்த ‛கிப்ட்’ தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி லைக்குகளை அள்ளி வருகிறது. அப்படி அந்த இளைஞருக்கு வாடிக்கையாளர் என்ன பரிசு கொடுத்தார்? வாங்க பார்க்கலாம்.
தற்போது நாட்டில் மனிதாபிமானம் என்பதே இல்லை என்ற பேச்சு பரவலாக காணப்படுகிறது. ஆனால் நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்த உலகில் மனிதாபிமானம் என்பது இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. மற்றவர்களின் கஷ்டத்தை பார்த்து நம்மால் இயன்ற உதவிகளை வழங்கும் குணம் இன்றும் நம்மில் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் தான் தற்போது இணைதயளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் தற்போது நெகிழ்ச்சியாக தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில் வாங்க பார்க்கலாம்..
அப்பாவி முகம், பயம் கலந்த பார்வை கொண்ட கண்கள். தோளில் கருப்பு நிற பேக். ஒரு கையில் செல்போன், இன்னொரு கையில் உணவு அடங்கிய பேக் என களைப்புடன் மாடிப்படி ஏறி வருகிறார் ஒரு இளைஞர். அந்த இளைஞர் ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் டீசர்ட்டை அணிந்துள்ளார். இதன்மூலம் அந்த இளைஞர் ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் நபர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. சில படிகள் ஏறி அவர் செல்ல எதிரே நிற்கிறார் உணவு ஆர்டர் செய்த அந்த வாடிக்கையாளர். ஏற்கனவே உணவு டெலிவரி செய்ய காலதாமதம் ஆனதால் அந்த இளைஞர் அவரை பார்த்து அச்சப்படுகிறார். இந்த வேளையில் வாடிக்கையாளர் அவரை திட்டவில்லை. மாறாக அவர் கூறியது என்னவென்றால், ‛‛டெலிவரி பாயை பார்த்த வாடிக்கையாளர் நான் மூன்றாவது மாடியில் இருக்கிறேன் என்று எப்படி உங்களுக்கு தெரியும்?, உணவு ஆர்டர் செய்த செயலியில் டெலிவரிக்கு 5 நிமிடம் தான் காட்டுகிறது. ஆனால் இவ்வளவு தாமதம் ஏன்? எவ்வளவு நாட்களாக இந்த வேலையை செய்கிறீர்கள்?” என கேள்வி கேட்டார். அதற்கு டெலிவரி செய்ய வந்த இளைஞர், ‛‛உங்களின் இருப்பிடத்தை ஆர்டர் செய்த செல்போன் செயலி தான் காட்டியது. கடந்த 3 மாதமாக இந்த பணியை செய்து வருகிறேன்” என ஒருவித பயத்தில் கூறினார். அவரது அந்த பயம் என்பது காலதாமதம் ஆகிவிட்டதால் உணவு பார்சலை வாடிக்கையாளர் ‛கேன்சல்’ செய்து விடுவாரா? என்பதை காட்டும் வகையில் இருந்தது. இந்த சமயத்தில் வாடிக்கையாளர், ‛‛ஏன் பயப்படுகிறீர்கள்.. தண்ணீர் எதுவும் வேண்டுமா?” என கேட்கிறார். அதற்கு டெலிவரி இளைஞர், ‛‛வேண்டாம்” என்று பார்சலை வழங்குகிறார். அதனை பெற்று கொண்ட வாடிக்கையாளர், ‛‛5 நிமிட டெலிவரி என நேரம் காட்டியது. ஆனால் 5 நிமிடத்தில் டெலிவரி வராததால் கோபமாக இருந்தேன். ஆனால் நீங்கள் சைக்கிளில் வந்து உணவு டெலிவரி செய்வதை பார்த்ததும் என் மனது மாறிவிட்டது. உங்களுக்கு பாராட்டுகள்” என்று கூறி அவரை பாராட்டும் வகையில் அந்த வாடிக்கையாளர் டெலிவரி பாய்க்கு ரூ.500 வழங்குகிறார்.டெலிவரி செய்ய வந்தவர் அதனை வாங்க தயக்கம் காட்டிய நிலையில் வாடிக்கையாளர் அவரிடமே வழங்குகிறார். அதனை கைகளில் பெற்றதும் முகத்தில் இருந்த கவலை நீங்கி டெலிவரி இளைஞர் சிரிக்க தொடங்குகிறார். அதுமட்டுமின்றி, ‛‛எனக்கு இவ்வளவு பணத்தை டிப்ஸ்ஸாக யாரும் இதுவரை தந்தது இல்லை” எனக்கூறுகிறார். அதன்பிறகு வாடிக்கையாளர், ‛‛இன்றைய வேலை முடிந்ததா? இல்லையா?” என்று கேட்க, டெலிவரி இளைஞர், ‛‛இன்னும் வேலை இருக்கிறது” என பதிலளித்து நன்றி கூறிவிட்டு அங்கிருந்த படிக்கட்டுகள் வழியாக இறங்கி சைக்கிளில் அடுத்த டெலிவரிக்கு செல்கிறார்.
இந்த சம்பவம் அனைத்தையும் வாடிக்கையாளர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை பிரதீக் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ஒரு கோடி பார்வையாளர்களை லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் லைக் போட்டு பாராட்டு தெரிவிக்கின்றனர்.பலரும் நாட்டில் இன்னும் மனிதாபிமானம் மரிக்கவில்லை உயிரோடு தான் இருக்கிறது என்று வாடிக்கையாளரை பாராட்டி வருகின்றனர்.