திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி – தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞர் அதே கல்லூரியில் வித்யாவுடன் படித்து வருகிறார். மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெண்மணி வித்யாவின் வீட்டிற்கு பெண் கேட்டு வந்ததாகவும், பெண் கொடுக்க வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் சரவணன் சம்மதிக்கவில்லை என்றும் தெரிகிறது. மேலும், வெண்மணியுடனான காதலை கைவிடுமாறு தங்கை வித்யாவை சரவணன் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வித்யாவின் பெற்றோர்கள் கோயிலுக்குச் சென்ற நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வித்யாவின் மீது பீரோ விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் வித்யாவின் நண்பர்களைக் கூட பார்க்க அனுமதிக்காமல் உடலை அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.

வித்யா

இதனிடையே வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய போலீஸார் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினர். முதற்கட்டமாக உயிரிழந்த வித்யாவின் பெற்றோரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை பேராசிரியர் மருத்துவர் குகன், உதவி பேராசிரியர் மருத்துவர் முத்துக்குமார் ஆகியோர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ள வித்யாவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

சரவணன்

அதில், தலையில் அடித்து வித்யா கொலை செய்யப்பட்டிருப்பது உறதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வித்தியாவுக்கும், அவரது சகோதரர் சரவணனக்கும் இடையே காதல் விவகாரம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, வெண்மணியுடனான காதலை கைவிடுமாறு வித்யாவை சரவணன் மிரட்டியுள்ளார். ஆனால், வித்யா அதற்கு மறுப்புத் தெரிவித்ததால், அரிவாளின் கைப்பிடியில் வித்யாவின் தலையில் சரவணன் தாக்கியுள்ளார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த வித்யா அதிகமான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர். பீரோ விழுந்து வித்யா உயிரிழந்துவிட்டதாக சரவணன் நாடகமாடியுள்ளார். இதைத் தொடர்ந்து. சரவணனை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலையில் வித்யாவின் பெற்றோர் மற்றும் வேறுயாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மாற்று சமூக இளைஞரை காதலித்ததற்காக இளம் பெண்ணை அண்ணனே அடித்துக் கொலை செய்த கொடூரம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.